மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், வரும் 30ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் வரும் 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெறுமென மாநிலங்களவை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4ஆம் தேதியுடன் நிறைவடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.