12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் இனி வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். அதில் வருமான வரி சட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி இன்றைய அறிவிப்பில், மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வாடகை மீதான வரி தள்ளுபடி ரூ.2.4 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை. 2023 ஆண்டில் 7 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் உச்ச வரம்பு தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கூடுதலாக ரூ.75 ஆயிரம் வரை நிலைக்கழிவுடன் சேர்த்து 12 லட்சத்து 75 ஆயிரமாக இது இருக்கும். அந்த வகையில் 12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான ஈட்டுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.