2025- 26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவர்களை உருவாக்க ஏற்பாடு மாநிலங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வட்டியில்லா 1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் மையம் அமைக்கப்படும், நகரங்களை வளர்ச்சி மையமாக்க 1 லட்சம் கோடி ஒதுக்கீடு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பான தனது கருத்தினை siன் மாநில செயலாளர் முத்தரசன் புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “பட்ஜெட்டில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கக்கூடியவர்களுக்கு சலுகை இருக்கிறது. மற்றபடி, பட்ஜெட்டில் வேறு யாரையும் கவனத்தில் கொண்டிருக்கவில்லை.
எதைப் பற்றி கவலை கொண்டுள்ளது என்றால், பிகாரைப் பற்றி கவலை கொண்டுள்ளது. பீகாரில் சட்டமன்ற தேர்தல் வருகிறது, கடந்த முறை ஆந்திராவுக்கும், பிகாருக்கும் சலுகைகளை வழங்கி இருந்தார்கள். இந்தமுறை பிகாருக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் அறிவிப்பு என்ன என்பது குறித்தான எந்த அறிவிப்பும் வரவில்லை.
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பிரச்னை என்பது விலைவாசி உயர்வும், வேலையின்மையும். இந்த இரு காரணங்களால்தான் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி குறைய வேண்டும் என்றால் பெட்ரோல் டீசல் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பட்ஜெட்டில் அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.
விவசாயிகளின் பிரச்னைகள் முக்கியமான பிரச்னைகளாக இருக்கிறது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றமே தலையிட்டு தீர்வு காணுங்கள் எனக்கூறியும் எந்தப்பயனும் இல்லை. விவசாய தொழிலாளர்களின் பிரச்னைகளை எப்படி தீர்க்கப்போகிறார்கள். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி இதில் ஒதுக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து எவ்விதமான அறிவிப்புகளும் இல்லை.
காப்பீட்டுத் திட்டத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவதில் 74% என்று இருந்ததை 100% ஆக அந்நிய முதலீட்டுக்கு அனுமதித்திருப்பது என்பது மிக்கடுமையான ஒன்று. இது மிக பாதிக்கக்கூடிய செயல்.
மிக அற்புதமான திருக்குறளைச் சொல்லியுள்ளார்கள். நிதிஷ்குமார் இடையில் பிரச்னை செய்துகொண்டு இருக்கிறார்; அவர் கூட்டணியில் இருந்து விலகிவிடாமல் இருக்க வேண்டும், அதைத்தாண்டி தேர்தலில் அவர்கள் அணி வெற்றி பெற வேண்டும் அதற்காக அந்த மாநிலத்திற்கு அதிகமான சலுகைகள் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கப்படவில்லை, ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும், மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் இருக்கிறது. இவற்றையெல்லாம் பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் நிதிநிலை அறிக்கையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.