நெல் மூட்டைகள் சேதம் pt desk
விவசாயம்

கடலூர் | அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர் - 5000 நெல் மூட்டைகள் சேதம்

புவனகிரியில் நேற்று முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக புதிதாக கட்டப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கி 5000 நெல் மூட்டைகள் சேதம். மழை நீரை வடிய வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

PT WEB

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டத்தில் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புவனகிரி அருகேயுள்ள ஆதிவராகநத்தம் பகுதியில் ரூ 62 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ளது.

அப்போதே சரியான போக்குவரத்து சாலை இல்லாத அந்த இடத்தில் மழை நீர் தேங்கி இருக்கும் இடமாகும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் அந்த இடத்தில்தான் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் கூறியபடியே தற்போது பெய்த கனமழையால் மழை நீர் முழுவதும் அங்கு தேங்கியுள்ளது. இதனால் கொள்முதல் நிலைய வளாகம் குளம் போல் காட்சியளிக்கிறது. மழைநீரை வெளியேற்றி நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பணியில் கொள்முதல் நிலைய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

5000 நெல் மூட்டைகள் வரை மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய விவசாயிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.