"இதை நான் தொடர்ந்து செய்வேன்" - ‘உழவர் விருதுகள்' குறித்து கார்த்தி | Karthi
விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகர் ரவி மோகன், நடிகை ரேவதி, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், OFM அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுடன் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்,
சிறந்த விவசாயி விருது – கோவில்பட்டியைச் சேர்ந்த திருமதி பழனியம்மாள்,
சிறந்த வேளாண் பங்களிப்பு விருது – மதுரையைச் சேர்ந்த திரு. பாமயன்,
சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது – வேலூர் மக்கள் நலச்சந்தை,
நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது – திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருது – குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.
விழாவில் உரையாற்றிய நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி, “நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை.எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்; இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம்.
நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். அந்த நிலை உருவாக இதுபோன்ற விழாக்களும், கலந்துரையாடல்களும் அவசியம். அதற்காகவே இதை நான் தொடர்ந்து செய்வேன்,” என்றார்.

