பாக் சிறுமி பாலியல் வன்கொடுமை: தன் குழந்தையுடன் நியாயம் கேட்ட செய்தி வாசிப்பாளர்
பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை ஒரு தாயாக தான் எப்படி உணர்கிறேன் என அங்குள்ள தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் செய்திவாசிப்பாளர் ஒருவர் தனது குழந்தையுடன் விவரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்படுகிறது.
பாகிஸ்தானின் கசூர் பகுதியை சேர்ந்த 7வயது சிறுமி ஷாயினப் (Zainab).இந்த சிறுமி கடந்த செவ்வாய்கிழமை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அந்த பகுதியில் உள்ள சிடிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி ஒரு நடுத்தர வயதுமிக்க நபருடன் செல்வது தெரியவந்துள்ளது. சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து சிறுமியின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும் குற்றவாளியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் தனது குழந்தையுடன் இதனை தான் எப்படி உணர்கிறேன் என்பதை கூறுகிறார். ஸ்டூடியோவுக்கு தனது குழந்தையுடன் வந்த செய்தி வாசிப்பாளர் அரங்கில் குழந்தையை தனது அரவணைப்பில் வைத்து தன் வேதனையையும் தாயாக தான் உணரும் வலியையும் பதிவு செய்துள்ளார்.

