காட்டுத் தீக்கு உயிரிழந்த வீரர்.. சவப்பெட்டியை சுற்றி சுற்றி வந்த மகள்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்..!

காட்டுத் தீக்கு உயிரிழந்த வீரர்.. சவப்பெட்டியை சுற்றி சுற்றி வந்த மகள்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்..!

காட்டுத் தீக்கு உயிரிழந்த வீரர்.. சவப்பெட்டியை சுற்றி சுற்றி வந்த மகள்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்..!
Published on

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த ஆண்ட்ரூ ஓ ட்வையர் என்பவரின் ஒன்றரை வயது மகள் தந்தை காலமானதை அறியாமல் அவரது தலைக்கவசத்தை அணிந்தபடி சவப்பெட்டியை சுற்றிச்சுற்றி வந்த காட்சி காண்போரை கலங்க வைத்தது.

2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய காட்டுத்தீ ஆஸ்திரேலியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. காட்டுத்தீயில் கருகிய விலங்குகளின் புகைப்படங்கள் மனித மனங்களை அசைத்துப் பார்க்கின்றன. ஏராளமான தாவரங்களையும், விலங்குகள் உள்பட 50 கோடி பிற உயிரினங்களையும், சுமார் 20 மனிதர்களையும் காட்டுத்தீ கொன்றுவிட்டது. அவர்களில் இருவர்தான் ஆண்ட்ரூ ஓ ட்வையரும், ஜெஃப்ரி கியாட்டனும்.

தீயணைப்பு வீரர்களான இருவரின் உயிரையும் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி காட்டுத்தீ பறித்துக் கொண்டது. இருவரும் தீயணைப்பு வீரர்கள் என்பதைத் தாண்டி அவர்களுக்குள் மற்றொரு ஒற்றுமை இருந்தது. இருவருமே ஒன்றரை வயது குழந்தைக்கு தந்தை என்பதே அது. கியாட்டனின் உடல் கடந்த வாரம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆண்ட்ரூவின் இறுதிச்சடங்கு சிட்னி நகரில் நடைபெற்றது.

அப்போது அவரது ஒன்றரை வயது மகள் சார்லட் தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை சுற்றிச்சுற்றி வந்தாள். தனது தந்தை பெட்டிக்குள் இருக்கிறார் என்பது மட்டும் அந்தப் பிஞ்சுக்கு தெரிந்ததே தவிர அவர் உயிரோடு இல்லை எனப் புரியவில்லை. எப்படியும் அவர் எழுந்து வந்துவிடுவார் என்ற ஆசையில் ஒரு கையால் சவப்பெட்டியை பிடித்தபடி மற்றொரு கையில் பிஸ்கட்டுடன் காத்திருந்தாள் சார்லட். தாய் அழைத்தும் கூட அங்கிருந்து நகர மறுத்துவிட்டாள்.

ஆண்ட்ரூவின் தலைக்கவசத்தை அணிந்தபடி சவப்பெட்டியை வலம் வந்த சார்லட் தனது தந்தையின் கையைப் பிடித்துச் சுற்றுவதைப் போல் உணர்ந்தாளோ என்னவோ? துயில் கலைந்து துள்ளி எழுந்து துணையாய் வருவார் தந்தை என்ற ஆவலில் சவப்பெட்டிக்கு கீழேயே படுத்திருந்தாள்.ஆனால் இறுதி வரை ஆண்ட்ரூ வரவில்லை, அதற்கு பதில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

கடைசியா‌க தனது தந்தையின் சவப்பெட்டிக்கு முத்தம் கொடுத்த அந்த பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சில் ஆண்ட்ரூவின் தியாகத்தைப் போற்றும் பதக்கம் அணிவிக்கப்பட்டிருந்தது. அதை சார்லட்டுக்கு அணிவித்த அதிகாரி அவளிடம் என்ன சொன்னார் தெரியுமா? உன் தந்தை தன்னலமற்றவர், அவர் ஒரு கதாநாயகன் என்பதாலேயே நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் எனக்கூறினார். இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் தனது தந்தை மறைந்ததையும், காலத்தால் மறையாத அவரது தியாகத்தையும் சார்லட் உணர்வாள். அப்போது அவள் கண்ணில் அழுகையும் ஆனந்தக் கண்ணீரும் ஒருங்கே வரக்கூடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com