ஐஃபோன் வாங்க ஒரு கிட்னியை விற்ற இளைஞரின் மற்றொரு கிட்னியிலும் பாதிப்பு ஏற்பட்டதால் 7 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று அவதிக்குள்ளாகி வருகிறார்.
2011 ஆம் ஆண்டு ஐஃபோன் 4 என்ற தொலைபேசி மிகவும் பிரபலமாக வலம் வந்தது. இதை இளைஞர்கள் மிகவும் விரும்பி வாங்கி உபயோகப்படுத்தி வந்தனர். அப்போது சீன இளைஞர் வாங் என்பவர் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் ஐஃபோன் வாங்க வழியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து ஐஃபோன் மீதுள்ள ஆசையால் நண்பர்களின் பேச்சைக் கேட்டு தனது கிட்னியை விற்று காசு வாங்கி அதன்மூலம் ஐஃபோன் வாங்க முன்வந்துள்ளார். அதன்படி தனது ஒரு கிட்னியை 3,200 யுஎஸ்டி டாலருக்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தை வைத்து ஐஃபோனும் வாங்கியுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை போலி மருத்துவமனையில் செய்யப்பட்டதால் வாங்கின் மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை சுகாதாரமான முறையில் செய்யப்படாததால் தொற்று ஏற்பட்டது. அதை வாங் முதலில் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். நாட்கள் போகபோக வாங்கின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாங் கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் படுத்தப்படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் பெற்றோர் டயாலிசிஸ் மற்றும் பிற செலவுகளுக்காகத் திண்டாடி வருகின்றனர்.