கவனம் ஈர்க்கும் சீன அதிபர் ஜின்பிங்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திபெத் விசிட்

கவனம் ஈர்க்கும் சீன அதிபர் ஜின்பிங்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திபெத் விசிட்
கவனம் ஈர்க்கும் சீன அதிபர் ஜின்பிங்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திபெத் விசிட்

சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்திய எல்லையையொட்டிய ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு நேற்றையதினம் வருகை தந்திருந்தார். அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள திபெத் பகுதியில் உள்ள நியிச்சிங் என்ற சிறு நகரத்திற்கு ஷி ஜின்பிங் சென்றதை, சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டு உறுதிசெய்தது.

இந்திய எல்லையை ஒட்டிய இப்பகுதிக்கு சீன அதிபர் ஒருவர் வருவதென்பது, பல தசாப்தங்களுக்குப் பிறகு இப்போதுதான் நடந்துள்ளது. பிரம்மபுத்ரா நதியில் சீனா மிகப்பெரிய அணை ஒன்றை கட்ட உள்ள நிலையில், அதன் நீர்ப்பாசன பகுதிகளை அதிபர் ஜின்பிங் பார்வையிட்டார். இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை நீடிக்கும் நிலையில் ஷி ஜின்பிங்கின் இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக திபெத் இருப்பதற்கும், நீண்ட காலமாகவே திபெத் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருப்பதற்கும் சில காரணங்கள் இருக்கிறது. திபெத் கடந்த 1951-ல் தாங்கள் சீனாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்ததாக கூறியது. ஆனால் இப்போதும் திபெத் தங்கள் கட்டுப்பாடில் இருப்பதாக சீனா கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இவ்விவகாரம் சீனாவின் உள்நாட்டு பிரச்னைதான் என்றும், பிற நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டாமென்றும் கூறி சீனா தங்களின் எதிர்ப்பை தெரிவித்தது.

சீனா தொடர்ந்து தங்கள் உரிமையாக திபெத்தை சொன்னாலும்கூட, திபெத் சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகவே இருக்கிறது. மட்டுமன்றி, இந்தியா உட்பட்ட இமாச்சலத்தில் பல பகுதிகளை சீனா உரிமை கோருவதாகவும் சர்ச்சைகள் உள்ளது. குறிப்பாக அருணாச்சலத்தை தெற்கு திபெத் என்று சீனா அழைப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவ்விவகாரத்தில் இந்தியா, சீனாவின் நிலைப்பாட்டுக்கு முரண்பட்டே உள்ளது. இக்காரணங்களால் அப்பகுதி ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது.

இப்படி பல சர்ச்சைகளுக்கும் விவகாரத்துக்கும் உட்பட்ட பகுதியான திபெத்துக்கு, கடுமையான முரண்பாடுகளுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புகளுடன் ஜின்பிங் தற்போது சென்றிருக்கிறார். இதனாலேயே இப்பயணம் அதிக கவனித்தை ஈர்த்து வருகிறது. சீன அதிபராக பதவியேற்ற பின், ஜின்பிங் திபெத்துக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இதுவே இருக்கிறது. முழுமையான அறிவிப்பின்றி அவர் சென்றதாக சொல்லப்படும் நிலையிலும், விமான நிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டிருந்திருக்கிறது. சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த ஜின்பிங்கை, பாரம்பரிய உடையணிந்து மக்கள் வரவேற்றிருந்தனர்.

திபெத்தியர்கள் மத்தியில் ஜின்பிங் பேசும்போது, “திபெத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்படியான சூழல் எதிர்காலத்தில் உருவாகும்” என்று கூறியிருந்தார். திபெத்தின் நியிங்கி என்ற நகருக்கு அவர் சென்றிருந்தார் என்பதால், அங்குள்ள பிரம்மபுத்ரா நதியருகே அமைந்துள்ள ஆற்றுப்பாலத்துக்கு சென்று சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொண்டார்.

அவரின் வருகைக்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருந்தனர். ஜின்பிங்கின் வருகையை தொடர்ந்து, இந்திய எல்லையில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவரின் இந்த திடீர் விசிட்டின் உண்மையான பின்னணிதான் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com