பயங்கரவாதிகள் என கைது செய்து சித்ரவதை: நஷ்ட ஈடு வழங்குகிறது கனடா!
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் பெயரில் தவறாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு கனடா அரசு, 25 மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்குகிறது.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி, பயங்கரவாதிகளின் தற்கொலை தாக்குதலால் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதில் சிரியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த அப்துல்லா அல்மால்கி, அகமது எல்மாட்டி, மயவுத் நுரெத்தின் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பயங்கரவாத தொடர்பு
இருப்பதாகக் கூறி கடும் துன்புறுத்தலுக்கும் அவர்கள் உள்ளாக்கப்பட்டனர். பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சம்பவத்துக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை, தவறாக உங்களை சிறையில் அடைத்துவிட்டோம் என்று கூறி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மூவரும் தங்களை தவறாக மூன்று வருடம் சிறையில் வைத்ததற்கு நஷ்ட ஈடாக 100 மில்லியன் டாலர் கோரி கனடா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 2008-ல் இதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை குழு அமைக்கப்பட்டது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழு, நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து கனடா அரசு, மூன்று பேருக்கும் 25 மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்குகிறது.

