உலகில் முதல்முறை | கடலில் இருந்து ரஷ்ய போர் விமானங்களை வீழ்த்திய உக்ரைன்!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்காக ரஷ்ய அரசு சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் அரசு அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. இதனாலேயே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே, போரைத் தீவிரப்படுத்துவதில் ரஷ்யா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், உலகிலேயே முதல்முறையாக ரஷ்ய போர் விமானங்களைக் கடலில் இருந்து ட்ரோன் மூலம் வீழ்த்தியிருக்கிறது உக்ரைன். உக்ரைன் உளவுத்துறையான GUR அறிவிப்பின்படி, ’ரஷ்யாவின் Su-30 போர் விமானம் உக்ரைனின் கடல்சார்பு ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இது உலகிலேயே முதல்முறையாகக் கடலில் இருந்து ஒரு ட்ரோன், போர் விமானத்தை அழித்ததைக் குறிக்கிறது’ என அது தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதல் கடந்த மே 2ஆம் தேதி நடைபெற்றதாகவும், கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் முக்கியமான நவரோசிஸ்க் போர்த்துறைக்கு அருகில் இடம்பெற்றதாகவும் அது தெரிவித்துள்ளது. Group 13 என்ற உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவு இந்தச் செயல்பாட்டை திட்டமிட்டு நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்காக, GUR மூன்று மகுரா-7 ட்ரோன் படகுகளைப் பயன்படுத்தியதாகவும், அவற்றில் இரண்டு, ரஷ்யாவின் ஜெட் விமானங்களை வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்து கருங்கடலில் விழுந்த வீரர்களை ரஷ்யா கப்பல் அழைத்துச் சென்றதாகவும், இரண்டாவது முறை வீழ்த்தப்பட்ட விமானத்தில் வீரர்கள் அனைவரும் பலியானதாகவும் அது தெரிவித்துள்ளது.