உலகம்
கொரோனாவிற்கு அஞ்சாத போர் வீரர் - 104வது பிறந்தநாளில் உற்சாகம்
கொரோனாவிற்கு அஞ்சாத போர் வீரர் - 104வது பிறந்தநாளில் உற்சாகம்
இரண்டாம் உலகப் போரில் களத்தில் நின்று போராடிய 104வயது முதியவர் ஒருவர் கொரோனா தாக்குதலுக்கு இடையே தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
உலகம் முழுவதையும் தற்போது கொரோனா பீதியடைய வைத்துள்ளது. சில நேரங்களில் இந்தப் பீதிக்கு இடையே, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து உயிர்பிழைத்த வயதானவர்கள் பற்றிய செய்திகள் வெளியாகின்றன. இவர்கள்தான் இன்றைய காலத்தில் நிஜமான ஹீரோக்கள். கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 104 வயதான முதியவர் ஒருவர் மன ரீதியாக வெற்றி பெற்றுள்ளார். சமூக விலகல் நடைமுறையில் உள்ள இந்த நேரத்தில் கடந்த புதன்கிழமை அன்று இந்த முதியவர் தன் குடும்பத்தினருடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
லெபனானில் உள்ள எட்வர்ட் சி. ஆல்வொர்த் படைவீரர் குடியிருப்பு பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இரண்டு வீடுகளில் வில்லியம் பில் லாப்ஷீஸ் என்பவரும் ஒருவர் என அந்த ஊர் தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது. இவருக்கு கடந்த மார்ச் 5 ஆம் தேதி அறிகுறிகள் தெரியத் தொடங்கியது. ஆகவே இவருக்கு மார்ச் 10 ஆம் தேதி கொரோனா மருத்துவ சோதனை நடந்தது. அதில் இவருக்கு கொரோனா நோய்த் தொற்றுள்ளது உறுதியானது. அவருக்குக் காய்ச்சல் இருந்தது. சுவாச கோளாறும் இருந்துள்ளது. ஆனால் இவர் இக்கட்டான தருணத்திலும் தனது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடி கொரோனா பீதியைத் தோற்கடித்துள்ளார்.
இப்போதும் இவர் வசிக்கும் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆகவே அனைத்து கடைகளும் பூட்டப்பட்டுள்ளன. எந்த வசதிகளும் முறையாக அங்கு கிடைப்பதில்லை. மேலும் பொது மக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாது. எனவே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவரைப் பராமரித்து வரும் ஒருவர், பில் முகத்தில் முகக்கவசம் அணிவித்து சக்கர நாற்காலியில் உட்கார வைத்து வெளியே கொண்டு வந்துள்ளார். அவரது குடும்பத்தினரும் அங்கு தூரத்தில் விலகி இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இவரது பிறந்த நாளை குறிக்கும் பதாகைகள் மற்றும் பலூன்களை காட்டினர். பிறகு உற்சாகமாக கேக் வெட்டியும் கொண்டாடினர்.
பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளு பேரன்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர். 1918 ஆண்டு மிகத் தீவிரமாகப் பரவிய ஸ்பானிஷ் ப்ளூ இடையில் இவர் பணியாற்றியுள்ளார். அப்போது பெரும் மனச்சோர்வை எதிர் கொண்டார். அதன்பின் சில நெருக்கடிகளிலிருந்து தப்பினார். இதை அனைத்தையும் விட, இவர் இரண்டாம் உலகப் போரிலும் வீரனாக நின்று போராடியுள்ளார். அலுடியன் தீவுகளில் ஒரு போர் வீரனாக இவர் நிறுத்தப்பட்டிருந்தார்.
இந்த ஊரில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக 15 வீரர்கள் சோதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.