இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்..!

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்..!
இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்..!

செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்கொலை தடுக்கப்படக் கூடியதே என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இந்த நாளின் நோக்கம்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 8 லட்சம் மக்கள் தற்கொலை செய்து இறக்கின்றனர். 15-29 வயது வரம்புடைய இளைஞர்கள் மத்தியில் தற்கொலையே மரணத்துக்கான இரண்டாவது பெரும்காரணமாக உள்ளது. அதுபோல இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது உலக அளவில் உள்ள நாடுகளில் 8 பேர் தற்கொலை செய்துகொண்டால் அதில் ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்பவராக உள்ளார். அதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2012 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் தற்கொலை செய்கின்றனர். தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கவும் தற்கொலைக்கு முயல்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குணப்படுத்தவும் உலக சுகாதார நிறுவனமும் தற்கொலைத் தடுப்புக்கான உலக அமைப்பும்  இணைந்து கூட்டாகப் பணியாற்றுகின்றன.தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை காரணம் அது அல்ல. ஒவ்வொரு தற்கொலைக்கு  பின்னணியிலும் பல்வேறு  உளவியல் மற்றும் சமூக காரணங்கள் உள்ளன.  குறிப்பாக  மன அழுத்தம் மட்டுமே  90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. அதுபோல மது பழக்கத்தினாலும் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்தும் உள்ளது .

உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை என்பது  60 சதவீதம் அதிகரித்துள்ளது. முக்கியமாக 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம். நம்மிடையே தற்கொலை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது. மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று நாம் நிலைக்கிறோம். ஆனால் தற்கொலை எண்ணம் என்பது எல்லா மனநிலை கொண்டோருக்கும், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணம்தான் என்பதை உணரவேண்டும்.

ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய அவர்களிடம் வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால், அவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சையானது மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும் என்பதே மனநல ஆலோசகர்களின் கருத்து.

தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்றால் தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, முதலில் நமது சமூக வட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். மனச்சோர்வு, மன அழுத்தம் என்பது மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணரவேண்டும். உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ உற்சாகம் இழந்து எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலக்க்கூடாது. அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை அன்பாகப் பேசி கண்டறிய வேண்டும்.

2013ஆம் ஆண்டில்  உலக சுகாதார நிறுவனமானது ‘மனநலச் செயல்பாட்டுத் திட்ட’த்தை முன்வைத்தது. அதன்படி உலக சுகாதாரப் பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டுக்குள் தற்கொலைகளின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எவ்வளவுதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சொல்லிக்கொள்ளும்படியாக முன்னேற்றம் ஏற்படவில்லை. அரசு மட்டுமல்லாது, நாம் ஓவ்வொருவரும் விழிப்புணர்வுடன், அக்கறையுடன் செயலாற்றினால் தற்கொலைகளை தடுக்கமுடியும் என்பதே உண்மை.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com