கொரோனா உயிரிழப்புகளை மறைக்கிறதா சீனா?: சந்தேகம் கிளப்பும் உலகநாடுகள்!!
கொரோனா பரவல் குறித்து உலக நாடுகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது சீனா. கொரோனாவால் பாதித்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து அந்நாடு தரவுகளை வெளியிடுவதாக உலக நாடுகள் சந்தேகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகவே தனது சந்தேகத்தை முன் வைத்தார். சீனா வெளியிடும் தரவுகளை உலக நாடுகள் நம்ப மறுப்பதற்கு கடந்த காலங்களில் அந்நாட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கணக்கிட உதவும் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி திறன் குறித்த தரவுகள் உண்மைக்கு புறம்பானவை என வல்லுநர்கள் தெரிவித்தனர். உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக சீனா வெளியிடும் தரவுகளில் 50% மட்டுமே உண்மை எனவும் விமர்சிக்கப்பட்டது. தொடக்க காலக் கட்டத்தில் கொரோனா வைரஸின் பரவல் தன்மையை கணிக்க தவறியதாக சீனா மீது விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக, ஜனவரி முதல் மார்ச் வரை கொரோனாவின் வரையறையை, தொடர்ந்து மாறி மாறி உலக நாடுகளுக்கு கூறி வந்தது சீனா.
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நபர்களை மட்டுமே கொரோனா தாக்கியவர்களாக தொடக்கத்தில் சீனா குறிப்பிட்டது. அதை சார்ந்தே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நாள் தோறும் வெளியிட்டது. ஆனால், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் மற்றும் அறிகுறி தென்படாமலும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என பின்னாளில் சீனா ஒப்புக்கொண்டது. எனவே, சீனா அரசு ஆரம்பம் முதல் தற்போது வரை எடுத்த கொரோனா உயிரிழப்பு தரவுகள் நம்பத் தகுந்தவையாக இல்லை என கூறப்படுகிறது.
கொரோனா வீரியத்தை உலக நாடுகளுக்கு மறைக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா குறைத்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பால் திங்களன்று யாரும் உயிரிழக்கவில்லை என சீனா கூறியதையும் உலக நாடுகள் சந்தேகத்துடனே பார்க்கின்றன. சீனாவில் கொரோனா பரவல் வீரியம் குறைத்துள்ளதற்கு உலக சுகாதாரம் நிறுவனம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

