ஜப்பான்: பாரம்பரிய நிர்வாண திருவிழா.. முதல்முறையாக கட்டுப்பாடுகளுடன் பெண்களுக்கு அனுமதி!

ஜப்பானில் பாரம்பரியமாக இடம்பெறும் நிர்வாண திருவிழா ஒன்றில், முதல்முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாண திருவிழா
நிர்வாண திருவிழாட்விட்டர்

ஜப்பான் நாட்டில் இனாஜவா நகருக்கு அருகில் உள்ள கோனோமியா என்ற கிராமத்தில் ஷிண்டோ மதத்தின் கோயில் ஒன்று உள்ளது. இங்குள்ள ஒகினினுஷி என்ற கடவுளுக்காக, 1650 ஆண்டுகளாக நிர்வாண திருவிழா ஒன்று ஆண்களால் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் இந்நிர்வாண திருவிழாவில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேர் கலந்துகொண்டு பல்வேறு சடங்குகளை மேற்கொள்வார்கள். குறிப்பாக, இந்த திருவிழா பண்டைய காலங்களில் நோய்களை களைய வேண்டி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, ஆண்கள் இடுப்பில் ஒரு சிறு உடையை அணிந்துகொண்டு இதில் கலந்துகொள்வார்கள். அவர்கள், கைகளில் மூங்கில் கொம்புகளை ஏந்திக்கொண்டு, ஒருவர் மீது ஒருவர் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டு ஊர்வலமாக கோயில் வரை சென்று வழிபாடுவார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் இந்த நிகழ்வினை வழிநடத்துவார். அவர் திருவிழா அன்று தனது தலையை மொட்டையடித்து, மக்கள் முன் செல்வார். அங்குள்ளவர்கள், அவரை தொடுவார்கள். அதன்மூலம் அவர்களது தீய சகுனங்களும், நோய்களும் மறைந்து நல்ல காலம் பிறக்கும் என்பது நம்பிக்கையாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: ஒளியிலே மறைந்த இளையராஜா வீட்டு இளவரசி; தூரமாய்ச் சென்ற ‘பவதா’ எனும் பவதாரிணியின் நினைவலைகள்!

இந்த நிலையில், இத்திருவிழா அடுத்த மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்தத் திருவிழாவில் முதல்முறையாக பெண்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும்விதமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு பல பெண்கள் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளபோதும், வழக்கம்போல இந்த முடிவுக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. ’இது பாரம்பரியத்தை அழிக்கும் செயல் என்றும் முன்னோர்களை மதிக்க வேண்டும்’ என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இந்த திருவிழாவில் கலந்துகொள்ள பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது முதற்கட்டமாக 40 பெண்கள் மட்டுமே அனுமதிப்படுவார்கள் என்றும், அவர்கள் முழுமையாக உடை அணிந்து, பாரம்பரிய ஹாப்பி கோட் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் பங்குச் சண்டை போட்டியில் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் முதல்முறை: நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்.. ஏன், எதற்காக, எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com