அமெரிக்கா | விமானத்தில் 25 நிமிடங்கள் நிர்வாணமாய் கத்திய பெண்.. நடுவானில் நிகழ்ந்த சோகம் #ViralVideo
சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், விமான இறக்கைகள் கீழே விழுவது, நடுவானில் விமானம் குலுங்குவது எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன. குறிப்பாக, விமானங்களில் நிலவும் அலட்சியமற்ற சேவைகளால் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. தவிர, விமான விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க விமானத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கத்திக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3ஆம் தேதி டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள வில்லியம் பி. ஹாபி விமான நிலையத்திலிருந்து அரிசோனாவின் பீனிக்ஸ் நோக்கிச் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயணித்த அந்தப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், குழந்தைகள் உட்பட மற்ற பயணிகள் முன்னிலையில் அவர் ஆடைகளை அவிழ்த்துவிட்டபடி, கத்திக் கொண்டு ஓடுவதைக் காண முடிகிறது. மேலும், அவர் கத்தியபடியே விமானியின் அறைக் கதவைத் தட்டியதாகவும், அதற்கு முன்பு விமானப் பணிப்பெண்களைக்கூட அவர் திட்டியதாகவும், தன்னை விடுவிக்க வேண்டும் என அவர் கோரியதாகவும் விமானத்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விமானத்தில் 25 நிமிடங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், ஹூஸ்டனின் ஹாபி விமான நிலையத்தில், அந்தப் பெண் போர்வையால் மூடி அழைத்துச் செல்லப்பட்டார். தற்போதைய கூற்றுப்படி, அவர் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மனநல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவகையில் உடல்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இது மிகவும் வேதனையாக விஷயமாக பார்க்கப்படுகிறது. தன்னையே மறந்து அவர் இப்படி நடந்து கொண்டது அங்கிருந்தவர்களுக்கு சற்றே தொந்தரவாக அமைந்து இருந்தாலும் அந்தப் பெண்ணின் வாழ்வில் இது சோகமான நிகழ்வுதான்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் ஒரு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஏனெனில், கேபினில் நபர் ஒருவர் நிர்வாணமாக வேகமாக நுழைந்தார். விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் ஒன்று, பெர்த்தில் இருந்து மெல்போர்னுக்கு புறப்பட்டுச் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.