”படிக்கவும் கூடாது, ஆண் மருத்துவரையும் பார்க்க கூடாது” -அராஜகத்தின் உச்சத்தில் தாலிபன்கள்!

”படிக்கவும் கூடாது, ஆண் மருத்துவரையும் பார்க்க கூடாது” -அராஜகத்தின் உச்சத்தில் தாலிபன்கள்!
”படிக்கவும் கூடாது, ஆண் மருத்துவரையும் பார்க்க கூடாது” -அராஜகத்தின் உச்சத்தில் தாலிபன்கள்!

தாலிபன்கள் வசம் ஆப்கானிஸ்தான் சென்றதில் இருந்தே பழமைவாத இஸ்லாமிய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பெண்கள் மீதான அடக்குமுறைகளை ஏவி வருகிறது. குழந்தையாகவே இருந்தாலும் ஆண் பிள்ளைகளின் துணையில்லாமல் பொதுவெளியில் பெண்கள் நடமாடக்கூடாது, பத்திரிகை, ஊடகத் துறைகளில் பெண்கள் பணியாற்றக் கூடாது போன்ற கெடுபிடிகளை விதித்து வந்த நிலையில் தற்போது பெண்களுக்கான அடிப்படை, அத்தியாவசிய தேவையான கல்வி உரிமையையும் பறித்திருக்கிறது தாலிபன் அரசு.

அதன்படி முதல் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே வகுப்புகளை நடத்த அனுமதித்திருந்த நிலையில் தற்போது மேல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு முற்றிலும் தடை விதிப்பதாக அரசாணையை வெளியிட்டு பெண்களின் எதிர்கால கனவுகள் மீது நெருப்பை அள்ளி வீசியிருக்கிறார்கள் தாலிபன்கள்.

இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள், ஆண்கள் என அனைவரும் தாலிபன்களின் இந்த அடக்குமுறையை எதிர்த்து போராடி வருகிறார்கள். தாலிபன்களின் இந்த அராஜக அட்டூழியங்களுக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் முன்வைத்திருக்கிறது.

இந்த நிலையில், ஆப்கானிய பெண்கள் தடகள விளையாட்டுகளில் ஈடுபட தடை விதித்திருக்கிறது தாலிபன் அரசு. இதைவிட மிகப்பெரிய கொடுமையான தடையாக மற்றொன்றும் இருக்கிறது. அதாவது, ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பார்க்கச் செல்லக் கூடாது என்ற விநோதமான விதியை கொண்டு வந்திருக்கிறார்கள் தாலிபன்கள்.

அதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் மாகாணத்தில் ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியே மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்படுவதோடு, பெண்களுக்கு ஆண்கள் மருத்துவம் பார்க்க கூடாது என்றும் தாலிபன்களின் பொது விவகாரங்களுக்கான துறை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கல்வி உரிமை மறுக்கப்பட்ட பிறகு ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சையும் பார்க்கக் கூடாது என்றால், உயர்கல்விக்கு செல்லாமல் பெண்களால் எப்படி மருத்துவராக முடியும்? நோய்வாய்ப்பட்ட பெண்கள் நோய் முற்றி சாவதுதான் தீர்வா? என்ற சரமாரியாக பல தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுப்பப்படுவதோடு, இப்படியான அடிமுட்டாள்தனமான அரசு உலகின் எந்த நாட்டிலும் இருக்கவே இருக்காது என்றும் காட்டமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுபோக, ஆப்கானிஸ்தானில் இன்னும் 10 நாட்களில் அழகு நிலையங்களை மூடவும், மால்கள் உள்ளிட்ட பார்லர்களில் பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என்றும் தடை போட்டியிருக்கிறது தாலிபன் அரசு. ஏனெனில் பெண்களுக்கான அழகு நிலையங்கள் இருப்பது தேசத் துரோகம் என்றும், அது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்றும் பாக்லன் மாகாண தாலிபன்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான எந்த சாதக அம்சங்களும் ஆப்கானிஸ்தானில் இருக்கவே கூடாது என்றும், 21ம் நூற்றாண்டில் இருக்கும் பெண்களை மீண்டும் 18ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்துக்கு இட்டுச் சென்று அடுப்படியிலும் புழங்கவும், வீட்டு வேலைகள், குழந்தைகள் குடும்பங்கள் ஆண்களுக்கு சேவை புரியும் அடிமைத்தனத்தையே தாலிபன்கள் செயல்படுத்தும் காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் என சமூக செயற்பாட்டாளர்கள் கொந்தளித்துப்போய் விமர்சித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com