செர்பியாவில் 60 வயதில் குழந்தை பெற்ற பெண்ணை அவரது கணவர் விட்டு விலகிச்சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்கு செர்பியா, ராஸ்கா மாவட்டத்தில் நோவி பஜாரில் சேர்ந்த தம்பதி செரிப் நோகிக் (68), அடிஃபா ஜாஜிக் (60), இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு கடைசியாக 60 வயதில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அலீனா என பெயர் சூட்டியுள்ளனர். குழந்தை நல்லப்படியாக பிறந்தவுடன் அவரது கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து செரிப் நோகிக் கூறுகையில், இந்த வயதில் குழந்தை பெற்றெடுக்க முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஆனால் என் மனைவி தான் விருப்பப்பட்டாள். அதன் படி குழந்தையும் பெற்றெடுத்தாள். இப்போது அவர் சந்தோசமாக இருக்கிறாள். ஆனால் நானோ உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன். எனக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் இருக்கிறது. இரவில் குழந்தை அழுவதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இந்த வயதில் குழந்தையை வளர்க்க முடியாது. ஆனால், அடிஃபா ஜாஜிக் குழந்தையை தனியாக வளர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால், இருவரையும் விட்டு விலகுவதாக முடிவு செய்துள்ளேன். மேலும் அடிஃபா ஜாஜிக் விந்தணு நன்கொடை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளதால் குழந்தையை தனது குழந்தை என பதிவு செய்யவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அடிஃபா ஜாஜிக் கூறுகையில், ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறேன். என் வாழ்நாள் கனவு நிறைவேறியது. இந்த வயதில் குழந்தையை வளர்ப்பது கடினம் என தெரியும். ஆனால் எனது வாழ்க்கையில் குழந்தை வேண்டும் என்பதே என் விருப்பம். தற்போது அது நடந்து விட்டது, நான் பயப்படவில்லை, என் குழந்தையை நான் தனியாக வளர்ப்பேன் என தெரிவித்துள்ளார்.