china robo
china robofile image

மருத்துவமனை பணியில் இருந்த ரோபோவை அடித்து நொறுக்கிய பெண்.. சீனாவில் வைரலாகும் வீடியோ! காரணம் என்ன?

சீனாவில், ரோபோ ஒன்றை பெண் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on

உலகில் ஒவ்வொரு நாளும் விதவிதமான கண்டுபிடிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அப்படியான அறிவியல் கண்டுபிடிப்புகளே இன்று உலகை ஆளக்கூடியவையாக இருக்கின்றன. அந்த வகையில் ரோபோ என்று சொல்லப்படும் கருவிகள், பல இடங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரோபோக்களில் பல வகைகள் உள்ளன. அதன்படி, சீனாவிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சீனாவில் ரோபோ ஒன்றை, பெண் ஒருவர் அடித்து நொறுக்கும் காட்சி வைரலாகி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, சீனாவின் வடகிழக்கு கடலோர மாகாணமான ஜியாங்சுவில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அம்மாகாணத்தில் உள்ள Xuzhou நகரில் உள்ள Xuzhou மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவமனையில் நோயாளிகளைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ரோபோ நிறுத்தப்பட்டிருந்தது. இதை மஞ்சள் நிற உடை அணிந்த அந்தப் பெண் மரக்கட்டையால் தாக்குகிறார். அவர், அதைத் தாக்கும்போது அங்குள்ள ஊழியர்கள் விலகிச் செல்கின்றனர்.

அதேநேரத்தில், அந்த ரோபோவை மீண்டும் மீண்டும் அந்தப் பெண் தாக்குவதால் ரோபோவின் துண்டுகள் சிதறி தரை முழுதும் விழுகின்றன. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை, டிக் டாக் செயலி முதலில் பகிர்ந்துள்ளது. பிற சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.

சீனாவின் பல மருத்துவமனைகளில் செவிலியர்களுக்குப் பதில் ரோபோக்களே நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளே நோயாளிகளைக் கவனிப்பதாகவும், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதில் நோயாளிகளுக்குச் சேவை செய்வதில் அசெளகரியம் ஏற்பட்டு, அதில் விரக்தி அடைந்ததன் மூலம் இந்தப் பெண், ரோபோவை தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில், மருத்துவ ஊழியர்களும் உள்ளூர்வாசிகளும், “அந்தப் பெண் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தன் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் ரோபோவை தாக்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மருத்துவமனைகளில் மருத்துவர்களையும், செவிலியர்களையும் அதிகளவில் நியமிக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com