இன்னிசை கேட்டு மான் ஒன்று ஓடி வந்து பார்வையாளராக மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்கள் வாழ்வில் இசை இடம்பெறுகிறது. இசையென்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல அனைத்து உயிர்களுமே இசையை ரசிக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக அவ்வப்போது பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அப்படி ஒரு இசை ரசிக்கும் மானின் வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
''என்னுடைய யாழ் வகுப்பு டிஸ்னி படமாக மாறிவிட்டது'' என்ற தலைப்புடன் பெண் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மரங்கள் நிறைந்த ரம்யமான வனப்பகுதியில் யாழ் வாசித்துக் கொண்டு இருக்கிறார் அந்த பெண். யாழ் இசையைக் கேட்டு மான் அவரை நெருங்குகிறது. இசை தொடரவே அந்த மான் நெருங்கி நெருங்கி வந்து அந்த இசையை கேட்டு ரசிக்கிறது. இசை முடிந்ததும் அந்த மான் துள்ளிக்குதித்து ஓடுகிறது. அந்த மானைக் கவனிக்காத அந்த பெண் கடைசியில் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
பலரும் அந்த வீடியோ குறித்து பதிவிட்டு வருகின்றனர். இசையை உணரத்தெரிந்த மான் என்றும், மிகவும் அழகான நிகழ்வு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்