'சாதி பாகுபாடு'-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் அமெரிக்க நகரமாகும் சியாட்டில்!

'சாதி பாகுபாடு'-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் அமெரிக்க நகரமாகும் சியாட்டில்!
'சாதி பாகுபாடு'-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் அமெரிக்க நகரமாகும் சியாட்டில்!

இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவிற்குள் நுழைவது வாடிக்கையானது. இதனால் அங்கு சாதிய ஒடுக்குமுறைப் பிரச்சனை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தலித்துகள், தாங்கள் யார் என்பதை மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றபோதிலும், சாதி அமைப்பு நடைமுறையில் உள்ளது. அப்படியிருக்க அமெரிக்கா போன்ற நாட்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக அமைப்பு உள்ளிட்ட இடங்களில்தான் சாதிப் பாகுபாடு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிற இடங்களிலும் சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்க ‘ஈக்வாலிட்டி லேப்ஸ்’ என்ற அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்பால், கடந்த 2016-ம் ஆண்டு, அமெரிக்காவில் சாதிப் பாகுபாடு குறித்த முதல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நாட்டில் உள்ள 25 சதவீதம் தலித்துகள் வாய்மொழி அல்லது உடல் ரீதியான தாக்குதலை எதிர்கொண்டதாக தெரிவித்திருந்தனர். அதே சமயம் பணியிடங்களில் மூன்றில் இருவர் மோசமான முறையில் நடத்தப்படுவதும் தெரியவந்தது.

இதற்கிடையே அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டில், பணியிடத்தில் சாதிப் பாகுபாட்டை எதிர்கொள்வதாக முதல்முறையாக வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பொறியாளருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக, சிஸ்கோ சிஸ்டம்ஸ் மற்றும் அதன் இரண்டு ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து, தற்போதே மேலும் பலரும் வழக்குத் தொடுக்க தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சியாட்டில் சிட்டி கவுன்சிலானது, தனது பிராந்தியத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பாதுகாக்க உதவும் நடவடிக்கையில் வாக்களிக்கவுள்ளது. வாக்களிப்பு நடத்தப்பட்டது. சியாட்டில் நகர சபையில், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை தடைசெய்யும் அவசர சட்டத்துக்கான தீர்மானத்தை, அங்குள்ள அதிகாரியான க்ஷமா சாவந்த் முன்வைத்திருந்தார். அது முதலில் இந்திய - அமெரிக்க சமூகங்களிடையே கடுமையான வாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தீர்மானத்தின்மீது நேற்று நடந்த கூட்டத்தில் வாக்களிக்க சியாட்டில் நகர கவுன்சில் திட்டமிட்டது. ஒருவேளை தீர்மானம் நிறைவேற்றபட்டால், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த முதல் அமெரிக்க நகரமாக சியாட்டில் மாறும் என சொல்லப்பட்டது.

மேலும் சியாட்டில் நகர சபையில் இந்தியாவின் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையிலும், சாதி, இனம், நிறம், பாலினம், மதம் மற்றும் தேசியம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இச்சட்டம் தடை செய்யும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இனம், தோற்றம் ஆகியவற்றுடன், அமெரிக்காவின் பாகுபாடு பட்டியலின் கீழ் சாதியும் சேர்ந்துள்ளது.

சாதி அமைப்பு எப்படி உருவானது?

"சாதி" என்ற வார்த்தை லத்தீன் மொழியில் உள்ள “காஸ்டஸ்” எனும் சொல்லில் இருந்து தோன்றியது. இது கற்பு அல்லது தூய்மையானது என பொருள்படும். கி.பி 1700-களில் போர்த்துகீசியர்களின் வருகையுடன் சேர்ந்து, “சாதி” எனும் சொல் இந்திய சொற்களஞ்சியத்தில் நுழைந்தது. அவர்கள் இந்திய சமூக படிநிலையைக் குறிக்கும் வகையில் "காஸ்டா" என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தினார்கள்.

சமூகப் படிநிலையைப் பற்றிய குறிப்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான “ரிக்” வேதத்தில் காணப்படுகின்றன. அங்கு காணப்படும் ஒரு பாடலானது கடவுளிடமிருந்து, அனைத்து உயிர்கள் தோன்றியதை விவரிக்கிறது. இங்கிருந்தே இந்து சமுதாயத்தின் நான்கு பிரிவுகள் (வர்ணங்கள்) வந்ததாகவும் ஒரு வசனம் கூறுகிறது. அதன்படி பிராமணர்கள் (பூசாரி வர்க்கம்) கடவுளின் தலையிலிருந்தும், க்ஷத்திரியர்கள் (வீரர்கள்) அவரது கைகளிலிருந்தும், வைசியர்கள் (வணிக வர்க்கம்) அவரது தொடைகளிலிருந்தும், சூத்திரர்கள் (தொழிலாளர்கள்) அவரது கால்களிலிருந்தும் தோன்றினர் என கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் வர்ண அமைப்பானது, தனிநபர்களின் பண்புகள் மற்றும் தகுதியின் அடிப்படையில் வகைப்படுத்த உதவியது. காலப்போக்கிலேயே அது சாதிய அமைப்பாக உருவானது. அதன்படி ஒரு நபரின் சமூக அந்தஸ்தானது, பிறப்பு மற்றும் தொழிலால் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு வெளியே இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்லது தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் தலித்துகள் என்றும் அழைக்கப்பட்டனர். சமஸ்கிருதத்தில் தலித்துகள் என்றால் "உடைந்த" என்று பொருள்படும்.

கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் "சாதி" என்ற சொல் உள்ளது. இந்தியாவில் 3,000-க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இந்தியாவில் அந்தந்த பகுதிகளுக்கே உரிய சாதிகளிலும் தரவரிசைகள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு பிராந்தியத்திலும் தலித்துகள் சமூகப் படிநிலையின் அடிமட்டத்திலேயே உள்ளனர். இவர்கள் பல நூற்றாண்டுகளாக சாதிய பாகுபாட்டுக்கு ஆளாகி வருகின்றனர். இன்றளவும்கூட மனித கழிவுகளை கையால் அகற்றும் மனிதாபிமானமற்ற பணிகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய மனிதாபிமானமற்ற நடைமுறையை கடந்த 2013-ம் ஆண்டு இந்திய அரசு தடை செய்தது. இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் “மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் நடைமுறை” தொடர்கிறது. இதன் பின்னணியிலும் சாதி இருக்கிறது.

இந்தியாவில் பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் சாதியும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றது. அதன்படி பெற்றோர்கள் தங்கள் சாதிக்குள்ளாகவே, குழந்தைகளுக்கான வரன்களைத் தேடுகின்றனர். ஆன்லைன் மேட்ரிமோனியல் தளங்களைக்கூட சாதியின் பெயராலேயே நினைவு கூறப்படும் அளவுக்கு, திருமணத்தில் சாதியின் பங்கு நிறைந்துள்ளது.

சாதி என்பது இந்தியாவிற்கோ அல்லது இந்து மதத்திற்கோ பிரத்தியேகமானதா?

இந்து நூல்களான மனு ஸ்மிருதி, பகவத் கீதை போன்றவற்றில், வர்ணம் மற்றும் சாதி பற்றிய கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் சாதிப் பிரிவுகளானது, இந்தியா அல்லது இந்து மதத்தில் மட்டும் காணப்படுவது அல்ல. உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட பிற சமூகங்களிலும் சாதியைக் காணலாம். இன்றளவும் இந்தியாவில் பிற மதத்திற்கு மாறிய தலித்துகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தகனம் செய்யும் இடங்களில் தனிமைப்படுத்தப்படுவது தொடர்கிறது.

சாதி என்பது பிரிட்டிஷாரின் கட்டமைப்பா என்பது குறித்து, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வரலாற்று இணைப் பேராசிரியர் அனன்யா சக்ரவர்த்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் முழு தேசமும் அட்டவணைகளாக வகைப்படுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் எந்த வகையிலும் சாதியைக் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இந்த சாதி அடையாளங்களை நிரந்தரமாக நிலைநிறுத்துவதில் பங்காற்றினர். இந்தியாவுக்குள், ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே, மிக நீண்ட ஆயுளைக் கொண்டதாக சாதி இருந்தது.

ஆங்கிலேயர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு திட்டங்கள், உதவித்தொகை மற்றும் அரசியல் உள்ளிட்டவற்றில் ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கினர். இந்திய அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில், ஒன்றிய, மாநில அரசுகளால் தலித்துகள் போன்ற பின்தங்கிய குழுக்களுக்கு இன்றளவும் ‘இடஒதுக்கீடு’வழங்கப்படுகின்றன. இடஒதுக்கீடு முறை சாதிகளுக்கிடையே பகைமைக்கு மற்றுமொரு ஆதாரமாக இருந்து வருகிறது. இத்தகைய திட்டங்கள் மற்றும் கொள்கைகளானது தகுதி அடிப்படையிலான அமைப்புக்கு எதிரானது என உயர்சாதி இந்தியர்கள் கூறுகின்றனர்” என்றார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை கோயில் தளங்களில் மாதத்திற்கு 450 டாலருக்கும் குறைவான ஊதியத்தில் வேலை செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, அங்குள்ள முக்கிய இந்து பிரிவான பிஏபிஎஸ் வழக்கை எதிர்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் ஒரே இனம் ஆவர். எனவே இனம் மற்றும் சாதியை சமன்படுத்துவது எச்சரிக்கப்பட வேண்டியது.

இதுகுறித்து யூனியன் தியாலஜிகல் செமினரியின் தத்துவப் பேராசிரியரும், ஆப்பிரிக்க - அமெரிக்க ஆய்வுகளின் அறிஞருமான கார்னல் வெஸ்ட், தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதன்படி, “சாதி மற்றும் இனவெறி இரண்டும் நிறுவனமயமாக்கப்பட்ட வெறுப்பின் வடிவங்கள். இதனை எதிர்த்து தார்மீக, அறிவு, அரசியல் ரீதியாக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறினாலும், சாதி அவர்களை விட்டு விலகுவதில்லை என்பதே கசப்பான உண்மை. அதிலும் சாதி பிரமிடின் அடிமட்டத்தில் இருப்பவர்களான தலித்துகளின் துன்பம் மட்டும், தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் வேதனை!

இதை ஒழிப்பதற்கான தொடக்கமாக அமெரிக்காவின் சியாட்டில் நகரம் இருக்குமா என்பதே அமெரிக்க வாழ் இந்தியர்களின் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.  

- ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com