இதற்கான செலவுகளை எல்லாம் ரஷ்யாவே ஏற்கும் - ஜெலென்ஸ்கி

இதற்கான செலவுகளை எல்லாம் ரஷ்யாவே ஏற்கும் - ஜெலென்ஸ்கி
இதற்கான செலவுகளை எல்லாம் ரஷ்யாவே ஏற்கும் - ஜெலென்ஸ்கி

போருக்குப் பின் உக்ரைன் நாடு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்றும், அதற்கான செலவை ரஷ்யாவே ஏற்கும் என்றும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. "சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பைத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போரில் உக்ரைன் நாட்டின் பொதுமக்களும், துப்பாக்கிகளை ஏந்தி ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகின்றனர்.

ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கெர்சன், கார்கெவ் உள்ளிட்ட நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், போருக்குப் பிறகு உக்ரைனை மீண்டும் புதுப்பிக்க உள்ளதாக, அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்யாவே, அதற்கான நஷ்ட ஈட்டை திரும்ப கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இரண்டு உலகப் போர்கள், மூன்று பஞ்சங்கள், இனப்படுகொலை, செர்னோபில் அணு உலை விபத்து, கிரிமியாவின் ஆக்கிரமிப்பு மற்றும் கிழக்கில் நடந்த போர் ஆகியவற்றிலிருந்து தப்பியுள்ளோம். ரஷ்யா, எங்களை பலமுறை அழிக்க நினைத்தது. ஆனால் அவர்களால் முடியவில்லை. நாங்கள் இதிலிருந்து எல்லாம் மீண்டுள்ளோம். இந்தப் போரைப் பார்த்து உக்ரேனியர்கள் பயப்படுவோம், உடைந்து போவோம், சரணடைவோம் என்று யாராவது நினைத்தால், அவர்களுக்கு எங்களைப் பற்றி எதுவும் தெரியாது. புடினுக்கு உக்ரைனைப் பற்றி எதுவும் தெரியாது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான இந்த மோதலில், சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் குறைந்தது 498 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கீட்டின்படி, இந்தப் போரால், சுமார் 160,000 உக்ரேனியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com