விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு சிறைச்சாலைக்குள் திருமணம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு சிறைச்சாலைக்குள் திருமணம்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு சிறைச்சாலைக்குள் திருமணம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் தன் நீண்ட நாள் தோழியான ஸ்டெல்லா மோரிஸ் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக இரகசியமான அமெரிக்க இராணுவ பதிவுகள் மற்றும் இராஜதந்திர விவகாரங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டு அதிரடி காட்டியவர் ஜூலியன் அசாஞ்சே. ராணுவ ரகசியங்கள் வெளியிட்டது தொடர்பாக 18 வழக்குகள் அவர் மீது அமெரிக்காவில் பதிவாகியுள்ளன. அவ்வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்க அதிகாரிகள் அவரை நாடு கடத்த முயன்றனர். எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கும் அசாஞ்சே, 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார், அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக இருந்தார்.

ஸ்டெல்லா 10 ஆண்டுகளுக்கும் மேலாக அசாஞ்சேவின் வழக்கறிஞராக இருந்து வருகிறார். 2011 இல் அசாஞ்சேவின் சட்டக் குழுவில் பணியாற்றத் தொடங்கியபோது அவரை சந்தித்தார் ஸ்டெல்லா. இருவரும் 2015 முதல் இணைந்து வாழத்துவங்கினர். ஈக்வடார் தூதரகத்தில் வசிக்கும் போது ஸ்டெல்லா மோரிஸுடன் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார். தற்போது சிறையில் உள்ள ஜூலியன் அசாஞ்ச் ஸ்டெல்லா மோரிஸ் என்பவரை  இரண்டு சாட்சிகள் மற்றும் இரண்டு காவலர்கள் என நான்கு விருந்தினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் சிறிய விழாவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு சிறைத்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், அசாஞ்சேவை நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் ஒப்புதலை எதிர்த்து அவர் வழக்கு தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com