ஆஸ்திரேலியாவில் புதிய தடைச்சட்டம் - பலரும் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?
ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதிற்குட்பட்டவர்கள் டிஜிட்டல் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைச்சட்டம் அமலுக்கு வர உள்ள நிலையில் சமூக ஊடகப் பயனர்களின் கணக்குகளை சரிப்பார்த்து 16 வயதிற்கு உட்பட்டவர்களின் கணக்குகளை முடக்கும் பணியை டிஜிட்டல் ஊடகங்கள் தொடங்கியுள்ளது . இந்த தடை ஆஸ்திரலியா நாட்டில் பெரும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில் இது குறித்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஆஸ்திரேலியா கல்வி முறை
கூட்டாட்சி நாடான ஆஸ்திரேலியாவில் பொதுப்பாடத்திட்டம் ஏசிஏஆர்ஏ (Australian curriculum,Assesment and Reporting authority) மூலமாக உருவாக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறும் அதாவது ஒவ்வொரு பாடத்தையும் எப்படி, எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும் மற்றும் தேர்வுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யும். உதாரணமாக விக்டோரியா மாநிலத்தில் குடிமை பாடப்பிரிவு அதிக நேரமும், குயின்ஸ்லேண்ட் மாநிலத்தில் குறைந்த நேரமும் கற்பிக்கப்படுகிறது. இந்த பொதுப் பாடத்திட்டத்தில் முக்கிய பாடமான மனிதவளம் மற்றும் சமூகவிழிப்புணர்வு பாடத்தில் வரலாறு ,புவியியல் ,குடிமை மற்றும் குடிமையியல், வணிகம் மற்றும் பொருளாதாரம் கற்பிக்கப்படும். இதன்படி, 3 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை குடிமை மற்றும் குடிமையியலை படிக்கும் மாணவர்கள் அதன்பின் இதனை விருப்பப் பாடமாக தேர்வு செய்வதில்லை. இதனால் மாணவர்களிடையே அரசியல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதல் குறைந்து காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆதாரமாக தேசிய தேர்வில் 6 ஆம் வகுப்பில் 43 சதவீதமும், 10 ஆம் வகுப்பில் 28 சதவீத மாணவர்களே குடிமை பாடத்தில் தேர்ச்சி பெறுகின்றனர்.
தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு
இந்த நிலையில், ஆஸ்திரேலியா அரசு 16 வயதிற்குட்பட்டவர்கள் டிஜிட்டல் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைச்சட்டம் கொண்டுவரவுள்ள நிலையில் 16 வயதிற்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கும் கணக்குக்களை டிஜிட்டல் ஊடக நிறுவனங்கள் முடக்கத் தொடங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக், யூட்யுப் மற்றும் எக்ஸ் வலைதளப்பக்கம் போன்ற முன்னணி சமூக வலைத்தளங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஏற்கனவே கல்வி முறை பாடத்திட்டங்கள் மூலமாக அரசியல் அறிவு மற்றும் விழிப்புணர்வு முழுமையாக பெறாத மாணவர்கள் இந்த தடையால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய நாட்டு கல்வியாளர்கள் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செய்திகள், அரசியல் விவாதங்கள், அரசு அறிவிப்புகள், தேர்தல் பிரச்சாரம், மனித உரிமை பற்றிய விவாதம், குடிமை மற்றும் சமூக பிரச்சனைகள் போன்ற அரசியல் நிகழ்வுகளை சமூக ஊடகங்கள் வழியாக இதுவரை அறிந்து கொண்ட மாணவர்கள் இதன்பின் இந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் எதிர்கால வாக்காளர்கள் அரசியல் புரிதலின்றி வாக்கு சாவடிக்கு செல்லும் நிலை ஏற்படும் இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல் அறிவு பெற முடியாது என்பது மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களின் குரல்கள் வெளிவருவது தடுக்கப்படும் என குழந்தைகள் உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனர் .
ஆஸ்திரேலிய அரசின் விளக்கம்
பள்ளி மாணவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதால் குழந்தை சுரண்டல், வன்முறையை ஊக்குவிக்கும் போக்கு, பாலியல் ரீதியான பிரச்சனைகள், சைபர் புல்லிங் , திருட்டுத்தனமான தகவல் சேகரிப்பு போன்ற டிஜிட்டல் க்ரைம்களில் அதிகம் பாதிக்கபடுகின்றனர். மேலும், இதனால் ஏற்படும் பலவிதமான மனநலச்சிக்கல்ளை சந்திக்கும் அவர்கள் மீண்டுவர மிகவும் சிரமப்பட்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுவதாகவும் இந்த பாதிப்புகளிலிருந்து அவர்களை பாதுக்காகவே இந்த தடைச்சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்கள் கருத்து
இந்த தடை குழந்தைகளை பாதுகாப்பது என்ற நல்ல நோக்கத்துடன் நடைமுறைக்கு வந்தாலும் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல்களை மறைப்பது, சமூக மற்றும் அரசியல் விவாதங்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வைப்பது சரியான தீர்வு இல்லை என்றும் இதற்கு பதிலாக டிஜிட்டல் மற்றும் ஊடக அறிவு, பொறுப்பான சமூக ஊடக பயன்பாடு மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு வரையறை பற்றிய பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வியில் வலுப்படுத்துவத தான் சரியான தீர்வாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் சமூக ஊடகப்பயன்பாடு
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் 9 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் தினமும் 3 மணிநேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு பதிவான 86,420 சைபர் குற்ற வழக்குகளில் ஆறில் ஒன்று சமூக ஊடக பயன்பாட்டால் நடந்த குற்றங்கள் என தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் அலோக் மித்தால் தெரிவித்துள்ளார். இதில் 4,199 குற்றங்கள் (4.9%) பாலியல் ரீதியான குற்றங்கள் எனவும், 3,326 குற்றங்கள் (3.8%) எனவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
உலகிலயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அவசியமாகிவிட்ட நிலையில் டிஜிட்டல் குற்றங்களை தடுக்க ஆஸ்திரேலியா நிபுணர்கள் அந்த நாட்டு அரசுக்கு பரிந்துரைத்த டிஜிட்டல் மற்றும் ஊடக அறிவு, பொறுப்பான சமூக ஊடக பயன்பாடு மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு வரையறை பாடங்களை இந்திய பாடத்திட்டத்தில் எதிர்கால தலைமுறையின் டிஜிட்டல் ஊடக பயன்பாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானது.
தமிழரசன் ஜெ

