உச்சபட்ச பதவியை இழக்கிறாரா உச்ச தலைவர்? அதிகாரம் யார் கையில்? ஈரானில் உண்மையில் நடப்பது என்ன?
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுக்கும், அந்நாட்டு ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைக்கும் இடையே மோதல் நிலவுவதாகவும் அனைத்து முடிவுகளையும் ராணுவமே எடுப்பதாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் அது செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், உண்மையில் ஈரானில் நடப்பது என்ன?
மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று, மத்திய கிழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் மேலும் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட இந்தப் போர் நிறுத்தத்தின் முக்கியக் காரணமாக, ஈரான் அரசாங்கம் கடுமையாகப் பிளவுபட்டிருப்பதாகவும் அந்நாட்டின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வருவதற்கு அவகாசம் அளிப்பதாகம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது, உலக நாடுகள் முழுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவிர, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுக்கும், அந்நாட்டு ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைக்கும் இடையே மோதல் நிலவுவதாகவும் அனைத்து முடிவுகளையும் ராணுவமே எடுப்பதாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் அது செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனாலேயே இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொள்ள ஈரான் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் ஈரானில் நடப்பது என்ன?
ஈரானுக்குள் நடக்கும் நிகழ்வுகள், பிளவுபட்ட அமைப்பைக் காட்டிலும், மறுசீரமைக்கப்பட்ட அமைப்பையே அதிகம் சுட்டிக்காட்டுவதாகவும், அங்கு, ஒரு கடுமையான இராணுவ-பாதுகாப்பு மையத்திற்குள் அதிகாரம் தீர்க்கமாக ஒருங்கிணைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), உச்ச தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் (SNSC) மற்றும் ஆழமான இராணுவத் தொடர்புகளைக் கொண்ட கூட்டணி அரசியல் பிரமுகர்கள் என அடங்கிய ஒரு மெகா கூட்டணி அமைப்பு இணைந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, குடிமை மற்றும் இராணுவத் தலைமைக்கு இடையே எந்தப் பிளவும் இல்லை என்று நம்பப்படுகிறது. அதேவேளையில் அதிபர் முதல் அமைச்சர்கள் வரை ஆட்சியின் பொது முகமாகத் தொடர்ந்தாலும், ராணுவம் எடுக்கும் முடிவுகளையே அவர்கள் செயல்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால், வரும் காலங்களிலும் அவர்களின் கையே ஓங்கும் என்று சொல்லப்படுகிறது. போரின்போது பல மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதும், பொருளாதார ரீதியாக அவர்கள் பலவீனமடைந்ததையும் தொடர்ந்து, அதை மீட்கும் முயற்சியில் அரசியல் மற்றும் அதிகார நடவடிக்கைகளில் ராணுவம் வலுப்படுத்தி வருவதாலேயே அந்த அமைப்பு உச்சம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகையால், வரும் காலங்களில் இவ்வமைப்பு எடுக்கும் முடிவுகள்கூட ஆபத்தாகக் கூட இருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.

