
அமெரிக்க டெக் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருவது உலக மக்களை அண்ணார்ந்து பார்க்கச் செய்து வருகிறது.
ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுளின் தாய் நிறுவனமான ALPHABET நிறுவனத்தின் CEO-வாக இருக்கிறார். அதேபோல சத்யா நாதெள்ளா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும், ஷாந்தனு நாராயெண் அடோப் நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்கள்.
இதேபோல உலகளவில் பிரபலமான பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவின் இந்திரா நூயி 12 ஆண்டுகளாக பதவி வகித்து கடந்த 2018ம் ஆண்டுதான் ராஜினாமா செய்தார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றும் வரையில் அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அக்ரவாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான்.
இப்படியாக இந்திய வம்சாவளியினர் பலரும் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களின் தலைமை பதவியில் காலோச்சியுள்ள நிலையில் அடுத்த அடியாக இந்தியாவைச் சேர்ந்த நீல் மோகன் தற்போது யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
யார் இந்த நீல் மோகன்? யூடியூபின் தலைமை பதவிக்கு வந்ததன் பின்னணி என்ன என்பதை காணலாம்.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த நீல் மோகன், 2008ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். 2015ம் ஆண்டு யூடியூபின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார்.
யூடியூப் தளத்தில் யூடியூப் டிவி, மியூசிக், ப்ரீமியம் ஆகியவற்றோடு சமூக வலைதள பயனாளர்களிடையே பிரபலமாக இருக்கும் யூடியூப் ஷார்ட்ஸ் ஆகிய சேவைகளின் டிசைனிங், கோடிங் போன்ற தயாரிப்புகளில் நேரடியாகவே மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார் நீல் மோகன்.
கூகுள் நிறுவனத்தில் விளம்பர பிரிவில் துணை தலைவராக எட்டு ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றியதன் விளைவாகவே தற்போது நீல் மோகன் யூடியூபின் சி.இ.ஓ பொறுப்பை பெற்றிருக்கிறார். இதற்கு முன்னதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும், stitch fix மற்றும் மரபணு மாற்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனமான 23andme என்ற நிறுவனத்திலும் முக்கிய பதவியில் இருந்திருக்கிறார்.
மேலும், 2007ம் ஆண்டு கூகுளால் வாங்கப்பட்ட doubleclick என்ற நிறுவனத்திலும் 6 ஆண்டுகள் நீல் மோகன் பணியாற்றியிருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளாக யூடியூபின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சூசன் வோஜ்சிக்கி ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு நீல் மோகன் தேர்வாகியிருக்கிறார்.