அடுத்த அதிபர் யார்? - விடை தெரியாமல் அலைபாயும் அமெரிக்கர்கள்!

அடுத்த அதிபர் யார்? - விடை தெரியாமல் அலைபாயும் அமெரிக்கர்கள்!
அடுத்த அதிபர் யார்? - விடை தெரியாமல் அலைபாயும் அமெரிக்கர்கள்!

அமெரிக்கத் தேர்தலில் தெளிவான முடிவு தெரியாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், அடுத்த அதிபர் யார் எனும் கேள்விக்கு பதில் தெரிய பல நாள்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

இதனிடையே, முக்கிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் தீவிர போட்டிக்கு மத்தியில் அதிபர் டிரம்ப் மற்றும் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இருவருமே வெற்றி நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.

வல்லரசான அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதுமே உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். 2020-ம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. தற்போதைய அதிபரான குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் ஆகியோர் தேர்தலில் முக்கிய வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற நிலையில், நேற்று (நவ.3-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற்றது. வரலாறு காணாத வகையில் பெருந்திரளான அமெரிக்கர்கள் வாக்களித்தனர். முன்னதாக, லட்சக்கணக்கில் தபால் வாக்குகளும் பதிவாயின.

வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், நள்ளிரவு வாக்கிலேயே தேர்தல் முடிவுகளின் போக்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடரும் நிலையிலும், அடுத்த அதிபர் யார் எனும் கேள்விக்கு தெளிவான பதில் தெரியாமல் இழுபறி நிலவுகிறது.

எதிர்பார்த்ததை விட, ட்ரம்ப் - பைடன் இடையே கடும் போட்டி நிலவுவது இதற்கு முக்கிய காரணம். அமெரிக்க தேர்தல் வழக்கப்படி மாகாணங்கள் வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரு வேட்பாளர்களுமே ஏறக்குறைய சமமான வாக்குகள் பெற்றுள்ளனர்.

வேட்பாளர்களுக்கு ஆதரவான மாகாணங்கள் அவர்கள் வசமான நிலையில், வெற்றியை தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாகாணங்களில் இழுபறி நிலவுகிறது.

இன்று (நவ.4) மாலை வெளியான தகவல்படி, பைடன் 224 இடங்களையும், அதிபர் டிரம்ப் 213 இடங்களையும் பெற்றுள்ளனர். அதிபராக தேர்வு செய்யப்பட 270 இடங்கள் தேவை. இதனிடையே தபால் ஓட்டுகள் எண்ணிக்கைதான் வெற்றியை தீர்மானிக்கலாம் என கருதப்படுகிறது.

தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிய தாமதமாகலாம் என்பதால், அதிபர் தேர்தல் தொடர்பான முடிவு தெரியவும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடர்பாக புகார்களோடு ட்ரம்ப் தரப்பு வரிந்து கட்டிக்கொண்டிருப்பதால், இது தொடர்பான சர்ச்சை வாக்கு எண்ணிக்கையை மேலும் தாமதமாக்கலாம் என்கின்றனர். வாக்கு எண்ணிக்கையில் முடிவு தெரிந்தாலும், முடிவு சாதகமாக அமையாவிட்டால் ட்ரம்ப் 'தேர்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடலாம்' என்று அவரே கூறியிருப்பதால், வழக்கு என வந்தால் இழுபறி மேலும் பல நாள்கள் நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அமெரிக்க தேர்தல் களத்தில் பரபரப்பு நீடிக்கிறது.

திரும்பும் வரலாறு...

இதற்கு முன்னர், 2000-ம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் முடிவு தெரியாமல் இழுபறி நீடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது முக்கிய மாகாணமான புளோரிடாவின் சொற்ப வாக்குகள், ஜார்ஜ் புஷ் வெற்றியை தீர்மானித்தன.

இழுபறி ஏன்?

அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் சிக்கலான முறையை கொண்டது. அதிபர் வேட்பாளரை முக்கியமாக கொண்டு தேர்தல் நடைபெற்றாலும், மொத்த வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில்லை. மாறாக, மாகாணங்களில் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் அந்த அந்த மாகாணங்களுக்கு உரிய இடங்களே அதிபரை தேர்வு செய்ய அடிப்படையாக அமைகின்றன.

இந்த நடைமுறை தேர்தல் வாக்களர் குழு (electoral college) என அழைக்கப்படுகிறது. இதன்படி மொத்தம் 538 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்வாளர்கள் அல்லது பிரதிநிதிகள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையிலேயே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த அடிப்படையில் அதிபராக வெற்றி பெற 270 வாக்குகள் தேவை.

அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவருமே 200-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ள நிலையில், முக்கிய மாகாணங்களின் வாக்குகள் இறுதி வெற்றியை தீர்மானிக்கும்.

இந்நிலையில், சர்ச்சைகள், புகார்கள், பதிலடிகள் ஆகியவற்றுக்கு நடுவே அமெரிக்கர்கள் அடுத்த அதிபர் யார் என அறிய படபடப்புடன் காத்திருக்கின்றனர்.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com