\
"The woman who helped man set foot on the moon! Who is this Margaret Hamilton?"
margaret hamiltonPT Web

நிலவில் மனிதன் கால் பதிக்க உதவிய பெண்.. யார் இந்த மார்கரெட் ஹாமில்டன்?

அப்பல்லோ திட்டத்தில் பணியாற்றியதோடு மட்டுமின்றி, மென்பொருள் உருவாக்கத்தை ஒரு முறையான பொறியியல் துறையாக வளர்த்தெடுப்பதிலும் மார்கரெட் ஹாமில்டன் பங்களித்தார்.
Published on: 
Summary

நிலவில் மனிதன் கால் பதித்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால், ஒரு பெண்ணின் மென்பொருள் தொழில்நுட்பப் பங்களிப்பும் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. அப்பல்லோ 11 விண்கலம் நிலவில் இறங்கியபோது கணினியில் எச்சரிக்கைகள் தோன்றிய நிலையில், விண்கலம் தொடர்ந்து செயல்பட உதவிய மென்பொருளை உருவாக்கிய குழுவில் முக்கியப் பங்கு வகித்தவர் மார்கரெட் ஹாமில்டன்.

செய்தியாளர் - ஷாலினி மூர்த்தி

அமெரிக்காவைச் சேர்ந்த கணினி விஞ்ஞானியான மார்கரெட் ஹாமில்டன், தனது 90-ஆவது வயதில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மென்பொருள் பொறியியல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

1936-ஆம் ஆண்டு அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் பிறந்த மார்கரெட் ஹாமில்டன், சிறு வயது முதலே கணிதத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்ற அவர், ஆரம்பத்தில் வானிலை தொடர்பான கணக்கீடுகளுக்கான கணினி நிரல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகமான எம்ஐடியில் கணினி நிரலாக்கப் பணியில் சேர்ந்தார்.

Margaret Hamilton
Margaret HamiltonPT

அந்தக் காலகட்டத்தில், இன்றைய கணினிகளைப்போல தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சியடையவில்லை. இருப்பினும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் அமெரிக்காவின் அப்பல்லோ விண்வெளித் திட்டத்தில் மென்பொருள் உருவாக்கம் மிக முக்கியமான பணியாக இருந்தது. இந்தப் பணியில் மார்கரெட் ஹாமில்டன் முக்கியப் பொறுப்பேற்றார்.

அவரது தலைமையிலான குழு, விண்கலத்தின் கணினி அமைப்புகள் சரியாகச் செயல்படுவதற்கான மென்பொருளை உருவாக்கியது. கணினியில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிவது, முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது, சிக்கலான சூழல்களிலும் கணினி தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்துவது ஆகியவற்றில் இந்த மென்பொருள் முக்கியப் பங்கு வகித்தது.

1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி, அப்பல்லோ 11 விண்கலத்தின் ஈகிள் நிலவிறங்கிக் கலம் நிலவில் இறங்கிக்கொண்டிருந்தபோது, கணினியில் 1201 மற்றும் 1202 என்ற எச்சரிக்கைகள் தோன்றின. கணினியில் ஏற்பட்ட அதிகப்படியான பணிச்சுமை காரணமாக இந்த எச்சரிக்கைகள் உருவாகின.

இந்தச் சூழலில், நிலவில் இறங்கும் முயற்சியைத் தொடரலாமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கணினி மென்பொருள் முக்கியமான பணிகளுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், நிலவில் இறங்குவதற்குத் தேவையான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடிந்தது. ஹூஸ்டன் கட்டுப்பாட்டு மையத்தின் அனுமதியுடன், நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் பயணித்த ஈகிள் கலம் பாதுகாப்பாக நிலவில் இறங்கியது.

இந்த வரலாற்றுச் சாதனையில் மார்கரெட் ஹாமில்டன் தலைமையிலான மென்பொருள் குழுவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

அப்பல்லோ திட்டத்தில் பணியாற்றியதோடு மட்டுமின்றி, மென்பொருள் உருவாக்கத்தை ஒரு முறையான பொறியியல் துறையாக வளர்த்தெடுப்பதிலும் மார்கரெட் ஹாமில்டன் பங்களித்தார். மென்பொருள் உருவாக்கத்துக்கு 'சாப்ட்வேர் இன்ஜினியரிங்' என்ற சொல்லைப் பயன்படுத்தி, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய முன்னோடிகளில் ஒருவராக அவர் அறியப்படுகிறார்.

பின்னர், சொந்த மென்பொருள் நிறுவனங்களையும் தொடங்கிய அவர், நம்பகமான மென்பொருள் அமைப்புகளை உருவாக்குவது தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். அவரது பங்களிப்பைப் பாராட்டி, 2016-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் உயரிய குடிமக்கள் விருதான 'பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்' விருதை வழங்கி கௌரவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மட்டுமின்றி, இன்றைய கணினி மென்பொருள் துறையின் வளர்ச்சியிலும் மார்கரெட் ஹாமில்டனின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நிலவில் மனிதன் கால் பதித்த சாதனையை உலகம் கொண்டாடியபோது, அந்தப் பயணத்தைச் சாத்தியமாக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பும் அதற்குப் பின்னால் இருந்தது. அந்தப் பங்களிப்புகளில் மறக்க முடியாத பெயராகத் திகழ்கிறார் மார்கரெட் ஹாமில்டன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com