கனடா ஆட்சியை தீர்மானிக்கும் ஜக்மீத் சிங் ! யார் இவர் ?

கனடா ஆட்சியை தீர்மானிக்கும் ஜக்மீத் சிங் ! யார் இவர் ?
கனடா ஆட்சியை தீர்மானிக்கும் ஜக்மீத் சிங் ! யார் இவர் ?

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங், கனடாவில் கிங் மேக்கராக உருவாகியுள்ளார். யார் இந்த ஜக்மீத் சிங்? இந்தியாவை விட அதிக எண்ணிக்கையிலான சீக்கியர்கள் கனடாவில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாக காரணம் என்ன? படிக்கலாம்.

கனடாவின் கிங் மேக்கர் இந்தியா, கனடா ஆகிய 2 நாடுகளிலுமே மக்கள் தொகை அடிப்படையில் 2 சதவிகிதம் பேர் சீக்கியர்களாக உள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக இந்தியாவை விட கனடாவில் சீக்கியர்களின் கரம் வலுவாக உள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இந்தியாவில் 13 சீக்கியர்கள் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் கனடாவில் அந்த எண்ணிக்கை 18ஆக உள்ளது. அதாவது இந்தியாவை விட அதிக எண்ணிக்கையிலான சீக்கியர்கள் கனடாவில் எம்பிக்களாக இருக்கின்றனர். கனடாவை பொறுத்தவரை பிரிட்டிஷ் கொலம்பியா, ஓண்டாரியோ, ஆல்பெர்ட்டா ஆகிய பகுதிகளில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர். 

சீக்கியர்களின் ஆதரவு என்பது கனடா அரசியல்வாதிகளுக்கு முக்கியமான ஒன்று. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் கூட 4 சீக்கியர்கள் இடம்பெற்றிருந்தனர். 338 உறுப்பினர்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், பிரதமர் ட்ரூடோவின் லிபரல் கட்சி 170 இடங்களை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்கு மேலும் 13 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 24 இடங்களில் வெற்றி பெற்ற புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவை அவர் கோருகிறார். எனவே இந்த முறை கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் புதிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜக்மீத் சிங். 

பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட ஜக்தரன் சிங் மற்றும் ஹர்மீத் கவுர் தம்பதிக்கு 1979ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி ஓண்டாரியோவில் பிறந்தவர் ஜக்மீத் சிங். இவரது சகோதரர் குராட்டன் சிங் ஓண்டாரியோ பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றி வந்த ஜக்மீத் சிங் 2011ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்து தேர்தலில் களம் கண்டார். முதலில் தோல்வியை தழுவினாலும் பின்னர் வெற்றி பெற்று மாகாண பேரவையின் உறுப்பினரானார். புதிய ஜனநாயக கட்சியில் தவிர்க்க முடியாத நபராக வளர்ந்த இவர், 2017ஆம் ஆண்டு புதிய ஜனநாயக கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். 

கனடாவின் ஸ்டைல் ஐகான் என ஊடகங்கள் இவரை வர்ணிப்பதுண்டு. இந்தியாவுக்கும் இவருக்குமான உறவு என்பது கசப்பானதாகவே இருந்துள்ளது. இந்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ஜக்மீத் சிங்,காலிஸ்தான் ஆதரவு கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியா அவருக்கு விசா வழங்க மறுத்தது. 2016ஆம் ஆண்டில் ஓண்டாரியோ பேரவையில் 1984ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த சீக்கிய கலவரத்தை இனப்படுகொலையாக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் தீர்மானம் அப்போது தோற்கடிக்கப்பட்டது. புதிய ஜனநாயக கட்சிக்கான தலைவர் பதவிக்கான போட்டியின் போது தனக்கு எதிராக இந்திய உளவு அமைப்புகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். 

இந்த தேர்தலை பொறுத்தவரை இளைஞர்களின் ஆதரவை பெறுவதில் தான் ஜக்மீத் சிங்கின் கவனம் இருந்தது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களை ஆக்கப்பூர்வமான முறையில் தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தினார். தேர்தல் பிரசாரத்தின் போது இவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ அங்கு பெருமளவில் பிரபலமடைந்தது. இந்த தேர்தலை ஜக்மீத் சிங் தலைமையில் எதிர்கொண்ட புதிய ஜனநாயக கட்சி 24இடங்களை கைப்பற்றி, 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் 2015ஆம் ஆண்டு தேர்தலில் இக்கட்சி 44 இடங்களை கைப்பற்றி மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், ஆட்சியை தீர்மானிக்கும் கிங் மேக்கராக உருவாக்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com