புதிய நோய்களை தடுக்க உயிருள்ள பாலூட்டிகள் விற்பனைக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை
புதிய நோய்கள் தோன்றுவதைத் தடுக்க, உணவுச் சந்தைகளில் உயிருள்ள காட்டு பாலூட்டிகளை விற்பனை செய்வதை நிறுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது.
உலகில் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதிலும், மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதிலும் இறைச்சி சந்தைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும் உயிருள்ள காட்டு பாலூட்டிகள் விற்பனை செய்வதை தடை செய்வது சந்தை தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
ஆரம்பத்தில் கொரோனா நோய்த்தொற்று சீன நாட்டின் உஹானில் உள்ள உணவு சந்தையிலிருந்து பரவத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. "விலங்குகள், குறிப்பாக காட்டு விலங்குகள்தான், மனிதர்களிடம் தோன்றும் 70 சதவீத நோய்களுக்கு காரணமாக உள்ளன. அந்நோய்கள் பலவும் நாவல் வைரஸ்களால் ஏற்படுகின்றன. குறிப்பாக காட்டு பாலூட்டிகள்தான் புதிய நோய்கள் தோன்றுவதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன" என உலக விலங்குகள் சுகாதார அமைப்பும், உலக சுற்றுச்சூழல் அமைப்பும் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் அறிக்கை தெரிவித்திருக்கிறது.
மேலும் "இறைச்சி சந்தைகளில் கொல்லப்படும் உயிருள்ள காட்டு பாலூட்டிகள் மூலமாக தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நோய்க்கிருமி பரவுவதற்கான ஆபத்துகள் ஏற்படுகின்றன" என்றும் அந்த வழிகாட்டுதல் அறிக்கை தெரிவித்தது.