சுனிதாவை பூமிக்கு அழைத்துவந்து உறுதிமொழியை காப்பாற்றிவிட்டார் ட்ரம்ப்! - வெள்ளை மாளிகை பெருமிதம்
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவரை பூமிக்கு பத்திரமாக அழைத்து வருவோம் என்ற உறுதிமொழியை ட்ரம்ப் காப்பாற்றிவிட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதற்காக எலான் மஸ்க், நாசா, ஸ்பேஸ் எக்ஸிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் வெள்ளை மாளிகையின் எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இது தவிர, 4 பேரும் கடலில் இறங்கிய காட்சிகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவிற்கு மென்மேலும் வெற்றிகள் கிடைத்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
உறுதிமொழியை காப்பாற்றிவிட்டார் ட்ரம்ப்!
விண்வெளியில் தவிக்கும் சுனிதாவையும் வில்மோரையும் மீட்க பைடன் எதுவுமே செய்யவில்லை என்றும், இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருந்ததாகவும் ட்ரம்ப் சில மாதங்களுக்கு முன் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் விண்வெளி வீரர்களுக்கான மருத்துவ மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவரும், இயல்பு நிலைக்கு திரும்பியது மருத்துவர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.
விண்வெளியிலிருந்து திரும்பிய நால்வரும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து கவுரவிக்கப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.