வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த அதிபர் ட்ரம்ப் திட்டம்?
அமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காவிட்டால், அதை முறியடிப்பதற்கான வீட்டோ அதிகாரத்தை அதிபர் ட்ரம்ப் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து வருவதை தடுக்கவும், போதை பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், எல்லையில் சுவர் எழுப்பப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு தேவையான நிதியை ஒதுக்க எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, ராணுவ நிதியை, சுவர் எழுப்புவதற்காக திசை திருப்பும் நோக்கில், தேசிய நெருக்கடியை ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அப்போது நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் வாக்களித்தால், அதை முறியடிக்கும் வகையில் முதல் முறையாக தனது வீட்டோ அதிகாரத்தை அதிபர் ட்ரம்ப் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் ஸ்டீஃபன் மில்லர், சுவர் எழுப்புவதற்காக பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலையை, அதிபர் ட்ரம்ப் தளர்த்த விடமாட்டார் எனக் கூறியுள்ளார்.