உலகை அச்சுறுத்தும் அணுகுண்டுகள்... எந்த நாடுகளிடம் அதிகம் இருக்கின்றன?

உலகை அச்சுறுத்தும் அணுகுண்டுகள்... எந்த நாடுகளிடம் அதிகம் இருக்கின்றன?

உலகை அச்சுறுத்தும் அணுகுண்டுகள்... எந்த நாடுகளிடம் அதிகம் இருக்கின்றன?
Published on

ஆபத்தான அணுகுண்டுகள்தான் இன்று உலக அமைதியைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அணுகுண்டுகள் இருந்தால்தான் பிற நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க முடியும் என்ற சூழல் இருக்கிறது. தற்போது அணுகுண்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் அமெரிக்காவும் ரஷ்யாவும் உருவாக்கிய அணுஆயுதப் போட்டியே இந்தச் சூழலுக்குக் காரணம்.

இதுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. ஸார் பாம்பா. அணுக்கரு இணைவு மூலம் பேராற்றலை வெளிப்படுத்தும் குண்டு. அணு ஆயுதப் போட்டி உச்சத்தில் இருந்த காலத்தில் ரஷ்யாவால் சோதனை செய்யப்பட்டது. மூன்று கட்டங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த அணுகுண்டு. முதல் நிலையில் யுரேனிய எரிபொருளைக் கொண்ட அணுக்கருப் பிளவு நடக்கும். இதன் மூலம் கிடைக்கும் சக்தியைக் கொண்டு, இரண்டாவது நிலையில் அணுக்கரு இணைவு மூலம் வெடிப்பு நடக்கும். இவை இரண்டின் சக்தியைக் கொண்டு மிகப்பெரிய வெப்பஅணுக்கரு வெடிப்பு நிகழும்.

1961-ம் ஆண்டு அக்போடர் 30-ம் தேதி சோதனை நடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள நொவாயா ஸெமில்யா என்ற தீவுக்கு விமானம் மூலம் இந்தக் குண்டு எடுத்துச் செல்லப்பட்டது. விமானத்தில் இருந்து குண்டை வீசியவுடன் அதைக் கண்காணிப்பதற்காக மற்றொரு விமானமும் பின்தொடர்ந்து சென்றது.

ஸார் பாம்பாவின் மொத்த எடை 27 மெட்ரிக் டன். நீளம் 26 அடி, விட்டம் ஆறரை அடி. மாஸ்கோ நேரப்படி காலை 11.32 மணிக்கு சோதனைக்களத்தை அடைந்த விமானம், அங்கிருந்து ஒரு பாராசூட் மூலம் ஸார் பாம்பா அணுகுண்டை விடுவித்தது. உடனடியாக அந்த இடத்தைவிட்டு அகன்ற விமானம் சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்றபோது, டெட்டனேட்டர் இயக்கப்பட்டு குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. அப்போது குண்டு தரையில் இருந்து 4 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது. பெருஞ்சத்தம். தீப்பிளம்பு. பேரதிர்வு. குண்டு வெடித்த இடம் கடலில் கரைந்தே போனது. சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமம் இருந்த தடமே இல்லாமல் போனது.குண்டு வெடித்த சத்தமும் அதிர்வும் பல நூறு கிலோ மீட்டர் வரை உணரப்பட்டன. சில ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளும் அதிர்வை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.

1945-ஆம் ஆண்டு ஹிரோஷிமாவில் வீசப்பட்ட லிட்டில் பாய் அணுகுண்டு வெளிப்படுத்திய ஆற்றல் 15 கிலோ டன் டிஎன்டி மட்டுமே. சில நாள்கள் கழித்து நாகசாகியில் வீசப்பட்ட ஃபேட்மேன் அணுகுண்டின் ஆற்றல் 21 கிலோ டன் டி.என்.டி. 1952-ஆம் ஆண்டு அமெரிக்கா சோதனை செய்த ஐவி கிங் அணுகுண்டின் ஆற்றல் 500 கிலோ டன். அமெரிக்காவின் பி53 அணுகுண்டு சோதனையில் வெளிப்பட்ட சக்தி 9 ஆயிரம் கிலோ டன் டி.என்டிக்கு இணையானது. 1954-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கேஸில் பிரோவோ சோதனையில் வெளிப்பட்ட சக்தி 15 ஆயிரம் கிலோ டன் டி.என்.டி. ஆனால் ரஷ்யா 1961-ஆம் ஆண்டு சோதனை செய்த ஸார் பாம்பா அணுகுண்டு மூலம் 50 ஆயிரம் கிலோ டன் டி.என்.டி சக்தி வெளிப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. அதாவது ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டைக் காட்டிலும் மூன்றாயிரம் மடங்கு.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மரபுசார் வெடிபொருள்களின் ஒட்டுமொத்தச் சக்தியைக் காட்டிலும் 10 மடங்கு அதிக சக்தி கொண்டது ஸார் பாம்பா. மக்கள் வசிக்கும் பகுதியில் இத்தகைய குண்டு வீசப்பட்டால், பல கோடி மக்கள் நொடிப்பொழுதில் மடிந்து போவார்கள்.
வடகொரிய விவகாரத்திலும், சிரியா விவகாரத்திலும் உரசிக் கொண்டிருக்கும் வல்லரசுகள் இதுபோன்ற ஏராளமான அணுகுண்டுகளை கைவசம் வைத்திருக்கின்றன. அதிகாரப்பூர்வமான கணக்கீடுகளின்படி, ரஷ்யா இதுவரை சோதனை செய்த அணுகுண்டுகளின் எண்ணிக்கை 1950, ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் வீசப்பட்ட அணுகுண்டுகளையும் சேர்த்து அமெரிக்கா 1740 அணுகுண்டுகளைச் சோதனை செய்திருக்கிறது. ரஷ்யாவைப் பொறுத்தவரை வீசுவதற்குத் தயார் நிலையில் 4300 அணுகுண்டுகளைச் சேமித்து வைத்திருக்கிறது. அமெரிக்காவிடம் 4 ஆயிரம் குண்டுகள் இருக்கின்றன. இவை தவிர ரஷ்யாவிடம் பழைய தொழில்நுட்பத்தைக் கொண்ட 2700 குண்டுகள் இருப்பில் உள்ளன. 

அமெரிக்காவிடம் 2800 பழைய குண்டுகள் உள்ளன. அந்த வகையில் ரஷ்யாவிடம் ஒட்டுமொத்தமாக 7 ஆயிரம் குண்டுகளும், அமெரிக்காவிடம் 6800 அணுகுண்டுகளும் இருப்பில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா, பிரான்ஸ் என அணுகுண்டு வைத்திருக்கும் அனைத்து நாடுகளையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தாலும் இந்த எண்ணிக்கையில் பத்தில் ஒருபங்குகூட வராது. அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பொறுத்தவரை, நேரடியான அணு ஆயுத யுத்தத்துக்கு இரு நாடுகளும் தயாராக இல்லை. ஆனால், இவ்விரு நாடுகளும் ஆங்காங்கே உரசிக் கொள்வதே உலக அமைதியைச் சிதைத்துவிடும். சிரியா அதற்கு நேரடியான சாட்சி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com