உலகின் பாதுகாப்பான நாடுகள் | அமெரிக்காவை முந்திய இந்தியா.. முதலிடம் பிடித்த நாடு இதுதானாம்!
நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு வருடமும் உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொதுவாக Safety Index (பாதுகாப்பு குறியீடு) என்பது ஒரு இடத்தின் பாதுகாப்பு நிலையை அளவிடும் ஒரு கணக்கீட்டு மதிப்பாகும். ஒரு நகரம், நாடு அல்லது ஒரு பகுதியின் குற்றச் செயல்கள், காவல்துறை செயல்பாடு, மக்களின் பாதுகாப்பு உணர்வு எப்படி இருக்கிறது போன்ற தகவல்களை வைத்து அதன் அடிப்படையில் கணக்கிடப்படும்.
அந்த வகையில், அன்டோரா நும் ஒரு சிறிய ஐரோப்பிய நாடு முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் இந்நாடு அமைந்துள்ளது. இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன் (ஐரிஸ் கடல் தீவு), ஹாங்காங் (சீனா), ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
அமெரிக்கா 91வது இடத்தையும் UK 86வது இடத்தையும் பிடித்துள்ளது. இது உலகின் மிகவும் வளர்ந்த இரண்டு நாடுகளில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. 147 நாடுகளில், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெற்காசிய நாடுகளில், சீனா 15-வது இடத்தில் உள்ளது. இலங்கை 59-வது இடத்தையும், பாகிஸ்தான் 65-வது இடத்தையும், வங்கதேசம் 126-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் ஆகிய 3 நாடுகள், உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதம் மற்றும் வலுவான பாதுகாப்பு உள்கட்டமைப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடைசி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.