இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. போர் பிரகடனம் செய்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தை பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலை அதிர வைத்த முதற்கட்ட தாக்குதலை ஹமாஸ் எப்படி நிகழ்த்தியது?... புகழ்பெற்ற அதன் உளவு அமைப்பு எங்கே தோற்றது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்..
இஸ்ரேல் நாடு இரும்புக்கோட்டை போன்ற பாதுகாப்புக்கு பெயர் பெற்றது.. அதன் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட படைபலங்களும் ஈ பறந்தால் கூட கண்டுபிடித்துவிடக்கூடிய உளவு பலமும் உலகளவில் பிரபலமானவை. இஸ்ரேலின் உள்நாட்டு உளவுப்படையான ஷின் பெட்டும் (SHIN BET), அயலக உளவு விவகாரங்களை கவனிக்கும் மொஸ்ஸாட்டும் (MOSSAD) நிகழ்த்திய நம்ப இயலாத சாகசங்கள் ஏராளம்.
இஸ்ரேலின் உளவு வீரர்கள் அண்டை நாட்டு ராணுவங்களுக்குள் கூட ஊடுருவியுள்ளதாக கூறப்படுவது உண்டு. அவ்வளவு ஏன் பாலஸ்தீன ஆயுதக்குழுக்குள்ளும் மொஸாட்டின் கரங்கள் நீண்டுள்ளதாகவும் கூறப்படுவதுண்டு. தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை சத்தமின்றி சமாதியாக்கும் வல்லமை பெற்றது மொஸாட். மொபைல் ஃபோன் வெடித்து இறப்பது என வினோதமான முறைகளில் எதிரிகளை முடித்துக்கட்டியுள்ளது இந்த உளவுப்படை. உளவு பலம் ஒருபுறம் என்றால் லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கள் இஸ்ரேலுக்கு மற்றொரு பலம்.
எட்டுத்திக்கிலும் எதிரிகள் இருக்கின்றனர் என்பதால் எல்லையில் சென்சார் பொருத்தப்பட்ட இரும்புவேலிகள் என பலப்பல பாதுகாப்பு ஏற்பாடுகளை அடுக்கடுக்காக செய்து வைத்திருந்தது இஸ்ரேல். இது அத்தனையையும் தாண்டி இஸ்ரேலில் சரமாரி தாக்குதலை நடத்தி உலகையே அதிர வைத்துள்ளது ஹமாஸ். அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு இணையான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் தன் கண் பார்வையிலேயே நடைபெற்ற தாக்குதல்களுக்கு இஸ்ரேல் உடனே பதிலடி கொடுத்தாலும் இதை முன்கூட்டியே கண்டறிய தவறிய உளவுத்துறையின் பிரமாண்ட தோல்வியாக இது பார்க்கப்படுகிறது. மொசாட்டின் கண்ணில் மண்ணைத்தூவி 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹமாஸ் தயார்படுத்தியது எப்படி என்ற கேள்வியும் இஸ்ரேலியர்களை குடைகிறது.
இது தவிர மலைபோல் நம்பிய IRON DOME எனப்படும் இரும்புக்கூரை ஏற்பாடும் பலன் தராதது இஸ்ரேலை திகைத்துப்போக வைத்துள்ளது. இந்த மில்லியன் டாலர் கேள்விக்கான விடையை எதிர்நோக்கி உலகமே ஆர்வத்துடன் காத்துள்ளது