பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ளும்?
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. பெரும் போரில் ஈடுபடும் அளவுக்கு பாகிஸ்தானிடம் பணம் இருக்கிறதா? பாகிஸ்தான் தீவிர போரில் இறங்கினால் அதன் பொருளாதாரம் எத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும்?
அரசியல் குழப்பங்கள், மோசமான நிர்வாகம் காரணமாக, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் 2023ஆம் ஆண்டு பாகிஸ்தான் திவால் நிலைக்கு உள்ளானது. 2021-22 இல் 6.2 சதவீதமாக இருந்த அதன் பொருளாதார வளர்ச்சி 2022-23 இல் மைனஸ் 0.2 சதவீதமாக சரிந்தது. பணவீக்கம் 38.5 சதவீதமாக உச்சம் தொட்டது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவில் உயர்ந்த நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கை கடும் நெருக்கடிக்கு உள்ளானது. மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு சென்றது பாகிஸ்தான்.
இதையடுத்து IMF, உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமும், சவுதி அரேபியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நட்பு நாடுகளிடமும் பாகிஸ்தான் உதவி கோரியது. பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு, முதற்கட்டமாக 3 பில்லியன் டாலரும், அடுத்த கட்டமாக 7 பில்லியன் டாலரும் பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் வழங்கியது. ஐஎம்எஃபின் நிதி உதவியால் பாகிஸ்தான் திவால் நிலையிலிருந்து மீளத் தொடங்கியது. எனினும், வெளிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்தும் அளவுக்கும், இறக்குமதி செலவினங்களை பூர்த்தி செய்யும் அளவுக்கும், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு மேம்படவில்லை.
இந்நிலையில், இந்தியா மீது பாகிஸ்தான் பெரிய இராணுவத் தாக்குதல் நடத்தினால், அது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மிகத் தீவிரமாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மோதல் தீவிரமடைந்தால், அது பாகிஸ்தானின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடிஸ் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால், ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கியிடமிருந்து நிதி பெறுவதில் சிக்கலை எதிர்கொள்ளக் கூடும். அது பாகிஸ்தானை மீண்டும் திவால் நிலைக்கு தள்ளிவிடும் என்கின்றனர்.