ஹவுதிகளின் அடுத்தடுத்த தாக்குதல்.. ஆட்டம் காணும் சவூதி.. ஆசியக் கோப்பைக்கு சிக்கல்!
செய்தியாளர் - ராஜ்குமார். ர
ஆசியக் கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டிகளில் ஒன்று AFC ஆசியக் கோப்பை. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடரில் ஆசியாவின் முன்னணி தேசிய கால்பந்து அணிகள் பங்கேற்கும். அந்த வகையில், 2027ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை சவூதி அரேபியா பெற்றிருந்தது. இதற்கான போட்டிகள் 2027 ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரியாத், ஜெட்டா, அல் கோபர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மைதானங்களில் 24 அணிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
ஆனால், சவூதி அரேபியாவின் பாதுகாப்புச் சூழல் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும், தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.
இதனால் அந்நாட்டின் பாதுகாப்பு நிலவரம் மேலும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் ஆசிய கால்பந்து கூட்டமைப்பான AFC, சவூதி அரேபியாவின் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, போட்டியை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏற்கெனவே 2027 ஜனவரி 7 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெறவிருந்த ஆசியக் கோப்பை தொடர், ஒத்திவைக்கப்படுவதாகவும் தள்ளிவைக்கப்படும் போட்டிகள் 2027 டிசம்பர் 23ஆம் தேதி தொடங்கி 2028 ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழல், பயண இடையூறுகள் மற்றும் போட்டியை நடத்துவதில் ஏற்படும் பல்வேறு நிர்வாக மற்றும் ஏற்பாட்டுச் சிக்கல்களே இந்த முடிவுக்குக் காரணம் என AFC தெரிவித்துள்ளது. புதிய தேதிகளுக்கு FIFA-வின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஆசியக் கோப்பை போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
