நாய்களைக் குறிவைக்கும் வடகொரியா.. உலகையே அதிரவைத்த செய்தி!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
"வெயில் உங்கள வாட்டி வதைக்குதா? இளநீர் குடிங்க... இல்லன்னா மோர் குடிங்க" என்று சொல்லித்தானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வட கொரியாவில் நடப்பதே வேறு. "வெயிலின் தாக்கத்தில் இருந்து எஸ்கேப் ஆக, நாய் சூப் குடிங்க" என்பதைத்தான் வட கொரிய மீடியாக்கள் இப்போது மக்களுக்கு அட்வைஸ் செய்கின்றன. வடகொரியாவில் என்ன நடக்கிறது? விரிவாக அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
வடகொரியா கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க நாய் இறைச்சி சூப் முதல் கோழி சூப் வரை பல்வேறு உணவுகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு ஊடகங்கள் மக்களுக்குப் பரிந்துரைத்துள்ளன. அதே நேரத்தில், அதிபர் கிம் ஜாங் உன் பொதுமக்களைப் போலவே கடுமையான வெப்பத்தையும் தாங்கிப் பணியாற்றும் தலைவராக அரசு ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.
வடகொரிய அரசு தொலைக்காட்சியின் தகவலின்படி, தலைநகர் பியாங்யாங்கில் வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. வானிலை பதிவுகள் தொடங்கியதிலிருந்து அங்கு பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாததால், ’சம்போக்’ எனப்படும் கோடைக்கால வெப்ப நாட்கள் குறித்து அரசு ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஆளும் தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ரோடோங் சின்முன் வெளியிட்ட உடல்நலக் கட்டுரையில், தர்பூசணி, வெள்ளரிக்காய், பாசிப்பயறு போன்ற குளிர்ச்சியான உணவுகளுடன், நாய் இறைச்சி சூப், மீன் கஞ்சி மற்றும் சிவப்பு பயறு கஞ்சி போன்ற சத்தான உணவுகளையும் உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாய் இறைச்சி சூப் கோடை வெப்பத்தைத் தாங்க உதவும் என்ற பாரம்பரிய நம்பிக்கையையும் அந்த நாளிதழ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஜின்செங், பசையரிசி மற்றும் பேரீச்சம்பழம் சேர்த்து தயாரிக்கப்படும் பாரம்பரிய கோழி சூப்பான ’சம்க்யேதாங்’ உணவுக்கும் அரசு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளன. வெப்பத்தில் உடல்நலத்தைப் பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
இதுவரை வெப்ப அலை காரணமாக உயிரிழப்புகள் குறித்து வடகொரியா எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், அண்டை நாடான தென்கொரியாவில் 20-க்கும் மேற்பட்டோர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, வடகொரியாவில் பாரம்பரிய உணவாகக் கருதப்படும் நாய் இறைச்சி சூப், கடும் கோடை வெப்பத்தைச் சமாளிக்க உதவும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே தொடர்வது வியப்பாக உள்ளது.

