யுனைடெட் ஹெல்த்கேர் CEO கொல்லப்பட்டது ஏன்? கைதான நபர் மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவி திட்டங்களை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, யுனைடெட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பிரையன் தாம்சன் (50), கடந்த வாரம் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் அவரை சுட்டதில் பலியானார்.
இது, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தப்பியோடிய அந்த மர்ம நபர் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு, அவரைக் கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி தருவதாக அளித்திருந்தனர். இந்த நிலையில்தான், அவர் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த வாடிக்கையாளர்களில் ஒருவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, நியூயார்க் நகரில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்சில்வேனியா மாநிலம் அல்டூனா பகுதிக்கு விரைந்த போலீசார், அவரை கைது செய்தனர். அவர்மீது கொலை குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. விசாரணையில், அவரது பெயர் லுய்கி மங்கியோன் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரிடம் கைது செய்யப்படுவதற்கு முன்பே வெளிவந்த சில தகவல்களால் காவல்துறையினரே அதிர்ந்து போயுள்ளார்.
தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், உதிரிப் பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் குண்டுகள், சைலன்சர் எனப்படும் சப்தம் வெளியில் கேட்காமல் இருக்க உதவும் கருவி, உடுத்தும் ஆடை, முகக்கவசம் ஆகியவற்றைக் கைப்பற்றி உள்ளனர். இதற்கிடையே அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது, நியூயார்க் நகர அரசு வழக்கறிஞர்கள் அவர்மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தினர். அவரிடம் போலியான அடையாள அட்டை, பெருமளவில் ரொக்கமும் இருந்ததால் அவர் தப்பியோடக்கூடும் எனக் கூறி ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டனர். இதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் லுய்கி மங்கியோன். பென்சில்வேனியா பல்கலைக்கழக பட்டதாரியான இவர், முன்னாள் தரவுப் பொறியியலாளர். TrueCar நிறுவனத்தில் 2023 வரை பணிபுரிந்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரபலங்களாக அறியப்படுகிறார்கள். இதில் Nino Mangione என்ற உறவினர், மேரிலாந்து மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் லுய்கி முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அறுவைசிகிச்சை செய்துள்ளார். ஆனாலும் அது சரியாய் வெற்றிபெறவில்லை. அது முதுகில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விரக்தியே அவரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கோபம்தான், அவரை மாற்றியிருக்கலாம் எனவும் அதன் காரணமாகவே தாம்சனைக் கொன்றிருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக, முதுகு வலி தொடர்பாக அதற்குத் தீர்வு காண்பதற்கு நிறைய புத்தகங்களை லுய்கி படித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவ ஆறு மாதங்களுக்கு முன்பு இவர் குடும்பத்தில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் குடும்பம் மற்றும் உறவினர், நண்பர்களிடமிருந்து தனது உறவைத் துண்டித்ததைத் தொடர்ந்து, அவரை அவர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர் கொலைக்குற்றத்தில் கைதாகியுள்ளார்.