\
Trump and Pedro Sánchez
Trump and Pedro Sánchezweb

வர்த்தகத்துக்கு தடை.. ஸ்பெயின் - ட்ரம்ப் மோதலின் பின்னணி என்ன?

நேட்டோ உச்சி மாநாட்டில் ஸ்பெயினை ‘மோசமான கூட்டாளி’ என குற்றம்சாட்டிய ட்ரம்ப், வர்த்தகமும் பயணமும் உட்பட அனைத்து தொடர்புகளையும் நிறுத்துமாறு கூறியுள்ளார்.
Published on
Summary

2026 அங்காரா நேட்டோ உச்சி மாநாட்டில் பாதுகாப்புச் செலவுகள், உக்ரைன் ஆதரவு, பிராந்திய பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதில் ட்ரம்ப், ’நேட்டோவில் ஸ்பெயின் மோசமான கூட்டாளி’, ’பணம் செலுத்தாத நாடு’ என கடுமையாக விமர்சித்து, ஸ்பெயினுடன் வர்த்தகம், பயணம், உரையாடல் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது இரு நாடுகளின் உறவை மேலும் பதற்றப்படுத்தியது.

செய்தியாளர் - M.மீரா

2026ஆம் ஆண்டிற்கான நேட்டோ (NATO) உச்சி மாநாடு துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில் ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பது, உக்ரைனுக்கான ஆதரவு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த மாநாட்டில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ”நேட்டோவில் ஸ்பெயின் ஒரு மோசமான கூட்டாளி. அவர்கள் இதில் பங்கேற்பதில்லை, பணமும் செலுத்துவதில்லை. ஸ்பெயினுடன் எனக்கு எந்த தொடர்பும் வேண்டாம். ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும், ஏன் அந்நாட்டிற்கான பயணங்களையும்கூட நிறுத்திவிடுங்கள்” என்று கூறினார்.

trump
trumppt web

மேலும், ”அவர்களிடம் பேசக்கூட வேண்டாம். அவர்கள் நம்பிக்கையற்றவர்கள், மோசமானவர்கள்” என்று கூறிய ட்ரம்ப், ”இன்னும் சில நாடுகள் உள்ளன, ஆனால் குறிப்பாக ஸ்பெயின்” என்று குறிப்பிட்டார். இராணுவத் திறன்களை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர் கருதும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளையும் இதில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா - ஸ்பெயின் மோதலின் பின்னணி

2035-ஆம் ஆண்டிற்குள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்குச் செலவிடுவதாக உறுதியளிக்காத ஒரே நேட்டோ உறுப்பு நாடு ஸ்பெயின் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயினின் பாதுகாப்புச் செலவுகள் விவகாரத்தில் ட்ரம்பிற்கும் அந்நாட்டிற்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியவுடன் ஸ்பெயின் பிரதமர், மாட்ரிட் போர் என்பது சர்வதேச சட்டத்திற்கு அப்பாற்பட்ட, நியாயமற்ற மற்றும் ஆபத்தான இராணுவத் தலையீடு என்றும் போருக்கு ஆதரவு இல்லை என்றும் கூறியிருந்தார்.

Roto, naval station, Spain
Roto, naval station, Spainweb

மற்றுமொரு தருணத்தில், இந்தப் பேரழிவை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் கூறி அமெரிக்க விமானங்களுக்கு ஸ்பெயின் தனது வான்வெளியை மூடிவிட்டதாகவும், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான திட்டங்கள் உட்பட அனைத்துக்கும் தடை விதித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஈரான் போருக்கு ஸ்பெயின் காட்டும் எதிர்ப்பின் காரணமாக, அந்நாட்டின் மீது முழுமையான வர்த்தகத் தடையை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com