“எல்லோரும் ஒன்றாய் கூடுவார்கள்.. அது பரவும்” அச்சத்தில் தள்ளிப்போகும் சீனர்களின் திருமணங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளதாக சீனாவின் திருமணம் நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் கொரோனா அச்சுறுத்தி பயத்தால் ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியுள்ளது. இதனால் அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்னாட்டு திருமண நிறுவனங்கள் சீனாவில் உள்ள தம்பதிகளுக்கு இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவு, மாலத்தீவு, ஜப்பானில் உள்ள ஒகினிவா உள்ளிட்ட நகரங்களில் திருமணம் நடத்திவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், அந்தத் திட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த சீன அரசு, இது அதிகக் கூட்டத்தை தவிர்த்து மக்களின் உடல்நலத்தை காப்பதற்கான முயற்சி என்று கூறியுள்ளது.
இது குறித்து பீஜிங் திருமணம் நடத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறும் போது, “கொரோனா பாதிப்பால் சீனாவில் உள்ள பீஜிங்கில் சீன தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் திட்டமானது, இந்த ஆண்டின் இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
கிழக்கு கொரியாவில் உள்ள புகைப்பட நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறும் போது, “கடந்த வருடங்களில் திருமணத்தில் புகைப்படம் எடுப்பதற்காக 20க்கும் மேற்ப்பட்ட ஆர்டர்கள் வந்தன. ஆனால், இந்த வருடம் ஒரு ஆர்டர் கூட வர வில்லை” என்று கூறியுள்ளார்.