மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் கிடையாது - ஜெர்மனி திட்டவட்டம்
பத்திரிகையாளர் கமால் கஷோகியின் மரண மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க முடியாது என ஜெர்மனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
சவுதி மன்னர், சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’பத்திரிகையில் எழுதி வந்தவர், ஜமால் கஷோகி. தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக ஜமால் கஷோகி அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார். அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ததற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்ற அவர், அதற்குப் பின் வெளியே வரவில்லை
சவுதி தூதரகத்துக்குள் சென்ற கஷோகியை தூதரக அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாக துருக்கி அரசும், ஊடகங்களும் சந்தேகம் எழுப்பின. ஆனால், சவுதி அரசு இதனை தொடர்ந்து மறுத்து வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ஜமால் கஷோகி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக துருக்கி போலீஸ், தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தியது. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, அவர் கொல்லப்பட்டார் என்பதை ஒப்புக் கொண்டது சவுதி அரேபியா. இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குள் நடந்த மோதலில் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக சவுதி அறிவித்தது. கஷோகிக்கும் அங்குள்ள தூதரக அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக சவுதி அரேபியாவின் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில் சவுதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தத்தை ஜெர்மனி ரத்து செய்தது. பத்திரிகையாளர் கமால் கஷோகியின் மரண மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க முடியாது என ஜெர்மனி உறுதியாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஒப்பந்தத்தை தொடர சவுதி அரேபியா அரசு கோரிக்கை விடுத்த நிலையில், கஷோகி மரண மர்மம் தீரும் வரை அப்பேச்சுக்கே இடமில்லை என ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.