கிம் ஜாங்குடன் காதலில் விழுந்து விட்டேன்... அமெரிக்க அதிபர் நகைச்சுவை பேச்சு!
தானும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் காதலில் விழுந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரெம்ப், வட கொரியா அதிபர் உடனான நட்பு குறித்து பேசினார். அதில் ''முன்பெல்லாம் நான் வடகொரிய அரசிடம் கடுமையாக நடந்துகொண்டேன். அதற்கு பதிலுக்கு அவர்களும் அப்படியே நடந்து கொண்டார்கள். ஆனால் சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்புக்குப்பின் நாங்கள் அழகான கடிதப்பரிமாற்றங்களை செய்து வருகிறோம். அதன் விளைவாக இருவரும் காதலில் விழுந்துவிட்டோம். உண்மையில் கிம் ஜாங் அழகான கடிதங்களை எனக்கு அனுப்புகிறார்'' என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் இதனைக்கேட்டுக்கொண்டிருந்த ட்ரெம்பின் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் சிரித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
முன்னதாக ட்ரெம்ப், கிம் இடையே வார்த்தை போர் நடைபெற்று வந்த நிலையில், ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு அதிபர்களும் சந்தித்து பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் இரு நாட்டு அதிபர்களும் சந்திக்க உள்ளதாகவும் இடமும், நாளும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன