இஸ்ரேல்-பாலஸ்தீனியர்கள் இடையேயான போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கு எதிரான போரில் யாருடைய உதவியும் தேவையில்லை என இஸ்ரேல் தூதர் அறிவித்துள்ளார். ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருவது உண்மைதான் எனவும் தெரிவித்துள்ளார். இந்த போர் தொடங்கியது முதல் தற்போது வரையிலான விவரங்களை இப்போது பார்க்கலாம்.
அக்டோபர் 7-ஆம் தேதி காலை 6.35 மணியளவில் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களில் ஹமாஸ் படையினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதலை தொடங்கினர். காலை 7.40 மணியளவில் ஹமாஸ் குழுவினரின் தாக்குதல் மற்றும் ஊடுருவலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் அரசு, மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியது. காலை 8.15 மணியளவில் ஜெருசலேமில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
காலை 8.23 மணியளவில் தெற்கு இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் குழுவினர் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்ததுடன், ராக்கெட் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். ஹமாஸ் குழுவினர் நுழைவை அடுத்து இஸ்ரேல் போர் எச்சரிக்கையை அறிவித்தது. காலை 10.46 மணியளவில் காசா மீது இஸ்ரேல் தனது முதல் பதில் தாக்குதலை நடத்தத் தொடங்கியது.
காலை 11.35 மணியளவில் போர் தொடங்கியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரபூர்வமாக அறிவித்தார். நண்பகல் 12.21 மணியளவில் தெற்கு இஸ்ரேலில் நுழைந்த ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதலை தொடங்கினர்.
மாலை 6.08 மணியளவில் இஸ்ரேல் பிரதமருடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என உறுதியளித்தார். இரவு 10.16 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் குழுவினர் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார். நள்ளிரவிலும் காசா மீது ராக்கெட் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
நள்ளிரவு 2.19 மணியளவில் தாக்குதலுக்கு பயன்படுத்திய காசாவின் அனைத்து இடங்களும் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் இந்நிலையில் ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கு எதிரான போரில் யாருடைய உதவியும் தேவையில்லை என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் அறிவித்துள்ளார். ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருவது உண்மைதான் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு இஸ்ரேல் நன்றி தெரிவித்துள்ளது. போரில் பிறருடைய ராணுவ ரீதியான உதவி தேவையில்லை. நாங்களே எங்களது போரை எங்களது சொந்த வலுவில் நடத்திக் கொள்வோம் என இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.