பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?

பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் புதன்கிழமை (ஜன.20)  பதவியேற்கவுள்ளனர். தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றிலும் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பைடன் 20-ம் தேதி பதவியேற்பு விழாவும் நாடாளுமன்ற கட்டடமான கேபிடல்ஸ் கட்டடத்தில்தான் நடைபெற உள்ளது.

மேலும், ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நாடாளுமன்ற கட்டடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பாதுகாப்பு ஏஜென்சிகள் பெற்றுக்கொண்ட அச்சுறுத்தல்கள் மற்றும் ஆயுத வன்முறைகள் பற்றிய பல அறிக்கைகள் காரணமாக வார இறுதியில் வாஷிங்டன் டி.சி உண்மையில் ஒரு காரிஸன் நகரமாக மாற்றப்பட்டது.

காரிஸன் நகரம் என்பது என்ன?

காரிஸன் என்பது ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு மாளிகையையோ பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் பாதுகாப்பு வீரர்களின் குழுவை குறிக்கும். இந்தக் குழுவில் 500-க்கும் பாதுகாப்பு வீரர்கள் இடம்பெற்றிருப்பர். அதுவும் இடத்துக்கு இடம் இந்த எண்ணிக்கை மாறுபடும்.

ஜனவரி 6-ம் தேதி நடந்த சம்பவத்தின் மட்டத்தில் பல்வேறு குழுக்களிடமிருந்து வன்முறை அச்சுறுத்தல்கள் குறித்து அதிகாரிகள் பல அறிக்கைகளைப் பெற்று வருவதால், முழு நகரமும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. மீண்டும் அதுபோன்ற அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பைடன் பதவியேற்க உள்ள வெள்ளை மாளிகை மட்டுமின்றி வாஷிங்டன் டி.சி நகரம் முற்றிலுமாக காரிஸன் நகரமாக மாற்றப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான உள்ளூர் காவல்துறையினர் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் 25,000-க்கும் மேற்பட்ட தேசிய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பென்சில்வேனியா அவென்யூவின் பெரும்பகுதியான கேபிடல் ஹில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை எட்டு அடி உயர இரும்புத் தடுப்புகள் கொண்டு தடுக்கப்பட்டுள்ளது.

``இது மற்றதைப் போலல்லாமல் ஒரு தொடக்க விழாவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கோவிட் கவலைகள், சில வரையறுக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் பொது அணுகல் ஆகியவற்றால் தடைகள் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்தது. எனினும் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் சமீபத்தில் கேபிட்டலைத் தாக்கிய சம்பவம் மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

எந்த அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது என்பதில் எங்கள் போலீஸ் அதிகாரிகள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும், ஏதேனும் தாக்குதல்கள் நடந்தால் அதைத் தடுப்பதற்கு அமெரிக்க ராணுவமும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. தேசபக்தர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் அரசாங்கத்தை கவிழ்க்கவும், காவல்துறை அதிகாரிகளை கொல்லவும் முயற்சிப்பார்கள் என்று நாங்கள் ஒருபோதும் நம்பவில்லை. அதுதான் நடந்தது.

எங்கள் தெருக்களில் ஆயுதமேந்திய துருப்புக்களைப் பார்க்க நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை. ஆனால், நாங்கள் வேறு பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறோம்" என்று வாஷிங்டன் டி.சி.யின் மேயர் பேட்டியளித்துள்ளார்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com