உக்ரைனுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர்!
உக்ரைன் மீது உக்கிரமாக போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான கேட் கேப்ஷா இணையர் உக்ரைனுக்கு நிவாரண உதவி அளித்துள்ளனர். தம்பதியர்கள் இருவரும் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு வழங்கியுள்ளனர். இந்திய ரூபாய் மதிப்பில் இதன் மதிப்பு 7.60 கோடி ரூபாயாகும்.
தம்பதியர் இருவரும் கடந்த 2020 வாக்கில் நிறுவிய Hearthland அறக்கட்டளை மூலமாக இந்த நிதியை வழங்கியுள்ளனர். இந்த நிதி மொத்தம் ஐந்து அமைப்புகளுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்து செஞ்சிலுவைச் சங்கம், போலந்து ஹியூமேனிடேரியன் ஆக்ஷன், World சென்ட்ரல் கிச்சன், ஹீப்ரு இமிகிரேண்ட் எய்ட் சொசைட்டி மற்றும் Urgent Action Fund என ஐந்து அமைப்புகளுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது.
முன்னதாக ஹாலிவுட் சினிமா நடிகர் டிகாப்ரியோ 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவ இயக்கத்திற்காக வழங்கியிருந்தார். உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை கொடுக்கும் நோக்கில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருந்தும் அதை ரஷ்யா கண்டு கொள்ளவில்லை.