வால்மார்ட் வளாகத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் கொலரடோ மாநில தலைநகர் டென்வரில் உள்ள வால்மார்ட்டில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். சுமார் 8 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு, பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் சமீபகாலமாக பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் நியூயார்க்கில் லாரியை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொலராடோ மாநிலத்தில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.