’உலகின் மிக முக்கியமான பிரதமர்’: மோடிக்கு இஸ்ரேல் பத்திரிகை புகழாரம்
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து உலகின் மிகமுக்கியமான பிரதமர் வருகிறார்; விழித்துக்கொள்ளுங்கள் என்று அந்நாட்டின் முன்னணி பத்திரிகை ஒன்று, தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது.
பிரதமர் மோடி, 3 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேலுக்கு வரும் ஜூலை 4ல் செல்ல உள்ளார். அவரது இந்த வருகை குறித்து ’தி மார்க்கர்’ (The Marker) எனும் இஸ்ரேலின் முன்னணி வணிக நாளிதழ், ’விழித்திரு இஸ்ரேல், உலகின் மிகமுக்கியமான பிரதமர் வருகிறார்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது. அதில், அமெரிக்க அதிகர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு வருவதற்கு முன்பாக, அந்த பயணம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால், அவர் பெரிதாக எதுவுமே கூறவில்லை. ஆனால், உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள நாட்டின் பிரதமராகவும், 125 கோடி மக்களின் தலைவராகவும் உள்ள மோடியின் வருகை அதைவிட முக்கியத்துவம் பெற வேண்டும் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் பெரும்பாலான பத்திரிகைகள் மோடியின் வருகைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, ஜெருசலேம் போஸ்ட் எனும் செய்தி இணையதளம் மோடி வருகை என்று தனியாக ஒரு பக்கத்தையே திறந்துள்ளது. இந்த பயணத்தின் மூலம் இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.