
Problem Child Dark Café என்று அர்த்தம் கொள்ளக்கூடிய மாண்டைஜி கோன் கஃபே தாகு என்ற கஃபேயில் பணிபுரிபவர்கள் இருண்ட மற்றும் பேய் மாதிரி அலங்காரம் செய்திருப்பர். இந்த கஃபேயானது ஜப்பானின் பொழுதுபோக்கு மாவட்டங்களில் ஒன்றான சுசுகினோவில் அமைந்திருக்கிறது. ஏப்ரல் 2ஆம் தேதி இந்த கஃபே ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது. அதில், காக்டெய்லில் ரத்தம் கலந்துகொடுத்த பணிப்பெண்ணை வேலையைவிட்டு நீக்குவதாக குறிப்பிட்டிருந்தது. மேலும், அந்த பெண்ணின் அபாயகரமான செயலுக்காக மன்னிப்பும் கோரியிருந்தது.
வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு இணங்கவே அந்த பணிப்பெண் தனது ரத்தத்தை காக்டெயிலில் கலந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பணிப்பெண்ணின் அந்த செயலானது ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட தக்கதல்ல’ என்றும், இதனால் அங்குள்ள கண்ணாடி கோப்பைகளை புதிதாக மாற்ற ஒருநாள் கஃபேக்கு விடுப்பு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் இந்த செயலுக்கும் பகுதிநேர பயங்கரவாதத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து மருத்துவர் ஜெண்டோ கிட்டாவோ கூறுகையில், ”அந்த பணிப்பெண் நிச்சயம் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், ரத்தம் கலந்த காக்டெய்லை குடித்தவர்கள் கட்டாயம் ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் சி, ஹெபடைடிஸ் பி மற்றும் சிபிலிஸ் போன்ற ரத்த பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். பானத்தின்மூலம் தொற்று பரவுவது அரிதானதுதான் என்றாலும், குடிப்பவரின் வாயில் புண் அல்லது காயம் ஏற்பட்டிருந்தால் கிருமிகள் எளிதில் ரத்தத்தில் கலந்துவிடும்” என்று விளக்கியுள்ளார். ஜப்பானில் விசித்திரமான தீம்களில் நூற்றுக்கணக்கான கஃபேக்கள் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.