கடலில் வெடித்து சிதறிய எரிமலை: இயற்கை பேரிடரால் உலகத்துடனான தொடர்பை இழந்த டோங்கோ தீவு

கடலில் வெடித்து சிதறிய எரிமலை: இயற்கை பேரிடரால் உலகத்துடனான தொடர்பை இழந்த டோங்கோ தீவு
கடலில் வெடித்து சிதறிய எரிமலை: இயற்கை பேரிடரால் உலகத்துடனான தொடர்பை இழந்த டோங்கோ தீவு

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான டோங்கோவில் கடந்த சனிக்கிழமை கடல் நீருக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்த தீவு நாடு உட்பட சில நாடுகளில் சுனாமி பேரலைகள் எழுந்தன. அதனால் டோங்கோ நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

எரிமலை வெடிப்பு, சுனாமி பேரலை பாதிப்பு என அடுத்தடுத்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தற்போதைய நிலை என்ன? அங்குள்ள மக்களின் நிலை என்ன? மாதிரியான விவரங்கள் ஏதும் உலக நாடுகளால் தெரிந்து கொள்ள முடியாத சூழல். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்த நாட்டை உலக நாடுகள் தொடர்பு கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது. 

கடலுக்கு அடியில் செல்லும் தகவல் தொலைத்தொடர்பு இணைப்புக்கான கேபிள்கள் எரிமலை வெடிப்பினால் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. அதனை சீர் செய்து மீண்டும் பழையபடி இணைப்பை பெற எப்படியும் சில நாட்கள் முதல் ஒரு வார காலம் வரை எடுக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹா'பாய் எரிமலை வெடித்ததில் அந்த நாட்டின் கடலுக்கு அடியில் அமைந்துள்ள சுமார் 37 கிலோ மீட்டர் தூரம் தகவல் தொலைத்தொடர்பு இணைப்புக்கான கேபிள்கள் சேதம் அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேபிள்கள் சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிஜி தீவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதை சீர் செய்தால் மட்டுமே மீண்டும் அந்த நாட்டுக்கு தகவல் தொடர்பு இணைப்பு கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகளை சீர் செய்வதற்காக பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சிறப்பு கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.

அனைத்தும் சரியாக சென்றால் இரண்டு வார காலத்திற்குள் கேபிள்களை சீரமைக்கலாம் என வல்லுனர் குழு தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை சீரமைப்பது சவாலான காரியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019-இல் டோங்கோ தீவில் கப்பலின் நங்கூரம் ஏற்படுத்திய சேதத்தால் கேபிள்கள் சேதமடைந்தன. அப்போது சுமார் ஒரு வார காலம் தகவல் தொடர்பு வசதியின்றி தவித்துள்ளனர் தீவு மக்கள். பின்னர் 15 ஆண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாட்டிலைட் இணைப்பை பெற்றது அந்த நாடு. இருப்பினும் பயன்பாட்டு விலை காரணமாக அதனை அரசு மற்றும் பயணம் படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது எரிமலை ஏற்படுத்தியுள்ள புகை மூட்டத்தினால் அந்த நாடு சாட்டிலைட் தொலைதொடர்பு வசதியும் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனால் அந்த தீவில் வசித்து வரும் மக்களின் உறவினர்கள் (உலகின் பிற பகுதிகளில் வசித்து வருபவர்கள்) அங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்து கொள்ள துடிக்கின்றனர். பிரார்த்தனைகளும், நம்பிகையும் மட்டுமே தங்களிடம் எஞ்சியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

டோங்காவிலிருந்து கிடைத்துள்ள அண்மைய தகவலின் படி அங்கு இயற்கை பேரிடரால் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com